2015-10-09 15:41:00

கடுகு சிறுத்தாலும்.. : பிரச்சனையை ஓர் ஓரமாக வைக்கப் பழகுங்க


ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடிக் குவளையை எடுத்து தூக்கிக் காட்டினார். “இது எவ்வளவு எடை இருக்கும்?” எனக் கேட்டார்.

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையைச் சொன்னார்கள்.

“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல. இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?” என அறிய விரும்புகிறேன் என்றார்.“ஒண்ணுமே ஆகாது சார்”என்றனர் மாணவர்கள்.

“நல்லது. ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?” எனக் கேட்டார் ஆசிரியர். “உங்க கை வலிக்கும் சார்”என பதில் வந்தது. “ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”என மறுபடி கேட்டார் அவர். “உங்க கை அப்படியே மரத்துடும் சார்” என்றனர் மாணவர்கள்.“மிகவும் நல்லது. ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கும் இந்த குவளையோட கனம் கூடிக்கிட்டே போகப் போவதில்லை. எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?” எனக் கேள்விக் கேட்டார் ஆசிரியர்.

“குவளையை உடனே கீழே வெச்சுடணும் சார்”உடனடி பதில் வந்தது மாணவர்களிடமிருந்து. “சரியான விடை. இந்த குவளைதான் பிரச்சனை. ஒரு பிரச்சனை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே தலைக்குள் ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்துடிச்சின்னா, உள்ளேயேப் போட்டு குழப்பாமல், தூக்கி ஓர் ஓரமாக வைக்கப் பழகுங்க. காலப்போக்கில், அதுவே சரியாயிடும்.” என்றார், உளவியல் தெரிந்த அந்த ஆசிரியர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.