2015-10-08 15:35:00

மாமன்றம் குடும்பங்களின் மகிழ்வில் கவனம் செலுத்தும்


அக்.08,2015. வத்திக்கானில் நடைபெற்றுவரும் 14வது உலக ஆயர்கள் மாமன்றம், குடும்பம் குறித்த நேர்மறையான கண்ணோட்டத்தை நிலைநிறுத்தும் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்தார் இங்கிலாந்து கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ்.

மொழி வாரியாக, 13 சிறிய குழுக்களாகப் பிரிந்து விவாதங்களில் ஈடுபட்டுவரும் மாமன்றத் தந்தையர், இந்தக் கருத்துப் பரிமாற்றங்களின் அறிக்கையை இவ்வெள்ளி காலை தொடங்கும் பொது அமர்வில் சமர்ப்பிப்பார்கள்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவைத் தலைவரும், இந்தக் குழுக்களில் ஒன்றை வழிநடத்துபவருமான கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், மக்கள் எவ்வளவுதான் பிரச்சனைகளைச் சந்தித்தாலும், அவர்களின் வாழ்வில் குடும்பங்களையே மிக முக்கியமாகக் கருதுகின்றனர் என்று தெரிவித்தார்.

திருஅவையின் விலைமதிப்பற்ற போதனையை நாங்கள் இழக்க விரும்பவில்லை, அதேநேரம், மக்கள், தங்களின் குடும்பங்களில் மகிழ்வைக் கண்டு அதை வளர்க்க ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் கூறினார் கர்தினால் நிக்கோல்ஸ்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.