2015-10-07 17:00:00

வாஷிங்டனில் திருத்தந்தை வீடற்றவர்களைச் சந்தித்ததன் எதிரொலி


அக்.07,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாஷிங்டன் நகரில் வீடற்றவர்களைச் சந்தித்தது, அவர்களுக்கு தங்கள் சுயமாண்பை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், இறைவனின் பிரசன்னத்தையும் அவர்கள் வாழ்வில் கொணர்ந்தது என்று, வாஷிங்டனில் பணியாற்றும் அருள் பணியாளர் .கூறினார்.

அண்மையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கியூபாவிற்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது, வாஷிங்டன் நகரில், கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பினர், வீடற்றவர்களுக்கு ஏற்பாடு  செய்திருந்த மதிய உணவில் அவர் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த இவ்வமைப்பின் தலைவர், அருள்பணி ஜான் என்ஸ்லெர் (John Enzler) அவர்கள், CNA கத்தோலிக்கச் செய்திக்கு அளித்த பேட்டியில், திருத்தந்தையின் வருகை, வீடற்றவர்கள் மத்தியில் உருவாக்கியத் தாக்கங்களைக் குறித்துப் பேசினார்.

அதிகாரத்தின் மையமான காங்கிரஸ் அவை உறுப்பினர்களைச் சந்தித்த சிறிது நேரத்தில், அதிகாரம் ஏதுமற்ற வீடற்றவர்களை, திருத்தந்தை சந்தித்தது, அவரிடம் விளங்கும் சமத்துவ உணர்வையும், வறியோர் மட்டில் அவர் கொண்டிருக்கும் தனிப்பட்ட அக்கறையையும் வெளிப்படுத்தியது என்று அருள்பணி என்ஸ்லெர் அவர்கள் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்களைச் சந்தித்துவிட்டுச் சென்றபின், தாங்களும் மாண்புமிக்கவர்கள் என்பதை தங்களால் உணர முடிந்தது என்று, வீடற்ற பலர் தன்னிடம் கூறியதாக, அருள்பணி என்ஸ்லெர் அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.