2015-10-07 16:24:00

மாமன்றத்தில், மொழிவாரியான குழுக்களின் கலந்துரையாடல்கள்


அக்.07,2015. குடும்பங்கள் என்றதும், பிரச்சனைகளைப் பற்றி மட்டும் பேசக்கூடாது, மாறாக, குடும்பங்கள், இறைவனின் ஆசீரை வெளிப்படுத்தும் அடையாளங்கள் என்பது குறித்தும் வலியுறுத்தவேண்டும் என்று, 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் பங்கேற்பாளர்கள் கூறினர்.

வத்திக்கானில் துவங்கியுள்ள உலக ஆயர்கள் மாமன்றத்தின் விவாதங்களைச் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்ட அருள்பணி லொம்பார்தி அவர்கள், குடும்பங்கள் வெளிப்படுத்தும் மகிழ்வு, அழகு இவற்றையும் மாமன்றம் கருத்தில் கொள்ளவேண்டும் என்ற விண்ணப்பம் எழுந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

குடும்ப உறவுகளில் உள்ள சிக்கல்களால், திருவிருந்து, ஒப்புரவு ஆகிய அருள் அடையாளங்களை அணுகி வர தயங்குபவர்களை, அடுத்து வரும் இரக்கத்தின் யூபிலி ஆண்டின்போது மீண்டும் திருஅவையில் இணைக்கும் வழிகளை, மாமன்ற தந்தையர் முனைப்புடன் தேடவேண்டும் என்ற கருத்து வெளியானது என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இதுவரை நிகழ்ந்துள்ள பொது அமர்வுகளில் பேசப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், மாமன்ற பங்கேற்பாளர்கள், இச்செவ்வாய் பிற்பகல் முதல் மொழிவாரியான குழுக்களில் கலந்துரையாடல்களை மேற்கொள்வர் என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் அறிவித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழு விவாதங்களில் கலந்துகொள்வாரா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, அருள்பணி லொம்பார்தி அவர்கள், குழு விவாதங்களில் திருத்தந்தை பொதுவாகக் கலந்துகொள்வதில்லை என்று கூறியபின், இருப்பினும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பல வேளைகளில் ஆச்சரியங்கள் தருவதுபோல, இப்போதும் செய்யக்கூடும் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.