2015-10-07 16:07:00

மறைக்கல்வி உரை – குடும்பங்களுக்கு திருஅவையின் முழு ஆதரவு


அக்.,07,2015. குடும்பத்தை மையப்படுத்தி, தற்போது வத்திக்கானில் இடம்பெற்றுவரும் ஆயர் மாமன்றத்திற்கு தயாரிப்பாக, தன் புதன் மறைக்கல்வி உரைகளில் குடும்பம் குறித்த ஒருதொடரை வழங்கிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இவ்வாரம், ஆயர் மாமன்றத்தைத் தொடர்புபடுத்தி, குடும்பம் குறித்த தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

குடும்பம் குறித்த ஆயர் மாமன்றம் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், சமுதாயத்தின் பொதுநலனுக்கு உதவுகின்ற கண்ணோட்டத்தில், குடும்பத்திற்கும் திருஅவைக்கும் இடையே நிலவும் ஆழமான உறவின் சில கூறுகள் குறித்து நோக்குவோம். இறைவனின் பாதையில் குடும்பங்கள் பயணம் செய்யும்போது, இறை அன்பின் அடிப்படை சாட்சிகளாக அவை விளங்குகின்றன. எனவே, குடும்பங்களுக்கு திருஅவையின் ஆதரவும், முழு அர்ப்பணமும் அத்தியாவசியமாக வழங்கப்பட வேண்டும். துன்ப வேளைகளில்கூட,  ஒருவர் ஒருவருக்கிடையே,  பற்றுமாறா உறுதிப்பாடு, நேர்மை, நம்பிக்கை, ஒத்துழைப்பு, மற்றும் மதிப்பு ஆகிய பண்புகளில், குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் இணைக்கப்பட்டுள்ளனர் என்பதை நாம் அறிவோம்.  சமூகத்தில், எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய நபர்கள், மிகுந்த அக்கறையுடன் நடத்தப்படுவது குடும்பங்களில்தான். இருப்பினும், இன்றைய அரசியல் மற்றும் பொருளாதார வாழ்வு, எல்லா நேரங்களிலும்  குடும்பங்களுக்கு தன் ஆதரவை வழங்குவதில்லை.  அதுமட்டுமல்ல, குடும்ப மதிப்பீடுகளை சமூக வாழ்வில் உள்புகுத்தி ஒன்றிணைக்கும் பலத்தையும் இழந்துவிட்டது.  இங்கு திருஅவையும், இறைவனின் குடும்பமாக எவ்வளவு தூரம் வாழ்ந்து வருகின்றது என்பதையும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய அழைப்புப் பெற்றுள்ளது. தூய பேதுருவைப்போல், திருஅவையும், மனிதர்களைப் பிடிக்கும் மீனவராக மாற அழைப்புப் பெற்றுள்ளது. இதற்கு ஒரு புது வகையான வலையும் தேவைப்படுகின்றது.   குடும்பங்களே இந்த வலை. தனிமை மற்றும் பாராமுகம் என்ற பெருங்கடலிலிருந்து, குடும்பங்களே நமக்கு விடுதலை வழங்குகின்றன. அதன் வழியாகவே, நாம், இறைவனின் குழந்தைகளாக இருப்பதில் கிட்டும் சுதந்திரத்தை அனுபவிக்கின்றோம்.  தான் பிடிக்கப்போகும் மீன்களின் அளவு மிகப்பெரிதாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையுடன், திரு அவை மிக ஆழமாகப் பயணம் செய்யட்டும். தூய ஆவியாரால் தூண்டப்படும் ஆயர் மாமன்ற தந்தையர்களும், இறைவார்த்தையில் நம்பிக்கை கொண்டு, விசுவாசத்திலும் உறுதிப்பாட்டிலும் திருஅவை தன் வலையை விரிக்க  ஊக்கமளிப்பார்களாக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.