2015-10-07 16:17:00

அமைதி ஆர்வலர்கள் : 1996ல் நொபெல் அமைதி விருது - பாகம் 2


அக்.07,2015. கிழக்கு திமோர் சுதந்திரத்திற்காகக் கடுமையாய் உழைத்த அந்நாட்டு அமைதி ஆர்வலர்கள் கத்தோலிக்க ஆயர் கார்லோஸ் சிமெனஸ் பெலோ, ஹோசே மானுவேல் ராமோஸ் ஹோர்த்தா ஆகிய இருவருக்கும் 1996ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. ஹோசே மானுவேல் ராமோஸ் ஹோர்த்தா அவர்கள், கிழக்கு திமோர் குடியரசின் அரசுத்தலைவராகப் பணியாற்றுவதற்கு முன்னர், அனைத்துலக அளவில் அமைதி ஆர்வலராகவே அறிமுமாகியிருந்தார். கிழக்கு திமோர் நாடு, தற்போது அந்நாட்டு மொழியில் Timor-Leste என்று அழைக்கப்படுகிறது. ஒரு சிறிய தீவாகிய கிழக்குத் திமோர், இந்தோனேசிய தீவுக் கூட்டங்களில் ஒன்றாகும். நானூறு ஆண்டுகளுக்கு மேலாக போர்த்துக்கீசிய காலனியாக இருந்த இத்தீவிலிருந்து 1975ம் ஆண்டில் போர்த்துக்கீசியர்கள் தங்களின் காலனி ஆதிக்கத்தை நீக்கிக் கொண்டனர். பின்னர், FRETILIN என்ற இந்நாட்டின் சுதந்திரத்திற்கான புரட்சி அமைப்பு, நாட்டின் சுதந்திரத்தை அறிவித்தது. ராமோஸ் ஹோர்த்தா அவர்கள், இந்த அமைப்பின் வெளியுறவு விவகாரம் மற்றும் தகவல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்தப் புதிய நாட்டிற்குப் பன்னாட்டு அளவில் ஆதரவைப் பெற வேண்டுமென்பதற்காக ராமோஸ் ஹோர்த்தாவை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தது FRETILIN அமைப்பு.

1975ம் ஆண்டு டிசம்பர் நான்காம் தேதி ஹோசே ராமோஸ் ஹோர்த்தா அவர்கள் நியுயார்க்கு நகரத்திற்குப் புறப்பட்டார். அதற்கு மூன்று நாள்களுக்குப் பின்னர் இந்தோனேசியா கிழக்குத் திமோரை ஆக்ரமித்து தனது ஆட்சியின்கீழ் கொண்டு வந்தது.

ராமோஸ் ஹோர்த்தா நியுயார்க்கில் ஐ.நா. பாதுகாப்பு அவையில் உரையாற்றினார். அதன் பலனாக, இந்தோனேசியா, கிழக்குத் திமோரிலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டுமென்று ஐ.நா. பாதுகாப்பு அவை ஒரே மனதாக தீர்மானம் நிறைவேற்றியது. ஆயினும், 1975ம் ஆண்டிலிருந்து 1999ம் ஆண்டு வரை ஏறக்குறைய 24 ஆண்டுகள் இத்தீவை ஆக்ரமித்திருந்தது இந்தோனேசியா. தனது தாயகத்திற்குள் நுழைய முடியாமல் ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் நாட்டிற்கு வெளியே வாழ்ந்த இவர், திமோர் மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஒரு வலையமைப்பை உருவாக்கிச் செயல்பட்டார். கிழக்குத் திமோர் தனி நாடாகச் செயல்பட விருப்பமா அல்லது இந்தோனேசியாவுடன் இணைய விருப்பமா என்ற பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பை 1999ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் நிறுவனம் கிழக்குத் திமோரில் நட்த்தியது. இத்தீவு நாட்டினர் ஒரே மனதாக தங்களின் சுதந்திரத்திற்காக ஓட்டளித்தனர். இதோடு இந்நாட்டின் வரலாறு முடிந்துவிடவில்லை.

கருத்து வாக்கெடுப்பு முடிவுகள் வெளியானவுடன், இந்தோனேசியாவுக்கு ஆதரவான புரட்சிக் குழு இத்தீவு முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டது. திமோரின் 85 விழுக்காட்டு கட்டடங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் துப்பாக்கி முனையில் மேற்குத் திமோர் தீவுக்கும், இந்தோனேசியாவின் பிற பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். ஆலயங்களில் அடைக்கலம் தேடியிருந்த பல வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள், பெண்கள் மற்றும் சிறார் படுகொலை செய்யப்பட்டனர். இப்படிக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கைத்  துல்லியமாகத் தெரியவில்லை. 1999ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி ஐ.நா. அமைதி காக்கும் படைகள் கிழக்குத் திமோருக்குச் சென்ற பின்னரே இந்தக் கொடூரச் செயல்கள் நிறுத்தப்பட்டன. பின்னர் ஐ.நா. இடைக்கால அரசை கிழக்குத் திமோரில் நிறுவி இந்தச் சிறிய நாடு மெல்ல மெல்ல மக்களாட்சிக்குத் திரும்ப வழி அமைத்தது. நாட்டிற்கு வெளியே வாழ்ந்து வந்த ராமோஸ் ஹோர்த்தா அவர்கள், 1999ம் ஆண்டு டிசம்பர் முதல் தேதியன்று நாட்டிற்குத் திரும்பினார். விமான நிலையத்திலும், சாலையெங்கும் மக்கள் நின்று இவருக்கு அமோக வரவேற்பைக் கொடுத்தனர்.

கிழக்குத் திமோரின் புதிய அரசில் மூத்த அமைச்சருக்குரிய இடத்தில் பணியாற்றிய ராமோஸ் ஹோர்த்தா அவர்கள், புதிய மக்களாட்சி அரசு மலருவதற்குப் பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டார். 2006ம் ஆண்டில் இராணுவத்திலிருந்து 500க்கும் மேற்பட்டோர் பிரிந்து சென்றதால், புதிய சனநாயக நாட்டில் மீண்டும் வன்முறை வெடித்தது. கட்டடங்கள் தீயினால் எரிந்தன. குற்றக் கும்பல்கள் தெருக்களில் வன்முறையில் ஈடுபட்டன. எனவே நாட்டின் அப்போதைய பிரதமர் கட்டாயமாகப் பதவி விலகினார். அப்போது வெளியுறவு அமைச்சராகவும், மூத்த அமைச்சராகவும் பணியாற்றிய ராமோஸ் ஹோர்த்தா அவர்கள், காலியாக இருந்த பிரதமர் பணியை எடுக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். 2007ம் ஆண்டு மே மாதத்தில் நாட்டின் அரசுத்தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏழைகளின் அரசுத்தலைவர் என்று தன்னை அழைத்துக் கொண்டு, கல்வி மற்றும் நலவாழ்வை ஊக்குவித்து நாட்டில் ஏழ்மையை அகற்ற உறுதி

பூண்டார். வர்த்தகம் வளர்வதற்கான சூழலை உருவாக்கினார். ஆசியாவில் ஏழை நாடுகளில் ஒன்றாக இருந்த கிழக்குத் திமோரின் பொருளாதாரம் தற்போது, ஆசியாவில் வலுவான பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது. வேலைவாய்ப்பின்மை குறைந்து வருகிறது. 2015ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்ற நூறு விழுக்காடு எழுத்தறிவை நோக்கி நாடு நடைபோடத் தொடங்கியது. ஒரு காலத்தில் கட்டடங்களைத் தீயிட்டுக் கொளுத்திய இளையோர், தற்போது, அமைதியின் திலி நகரம் என்ற இவரின் திட்டத்தின்கீழ் உழைத்து வருகின்றனர். சண்டைக்குப் பிரியாவிடை, வளர்ச்சிக்கு வரவேற்பு என்ற புதிய விருதுவாக்குடன் அரசு செயல்பட்டு வருகிறது.

கினி பிசாவ் ஆப்ரிக்க நாட்டிற்கு ஐ.நா. பொதுச் செயலரின் சிறப்புப் பிரதிநிதியாக, ஐ.நா. பொதுச் செயலரால் 2012ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார் ராமோஸ் ஹோர்த்தா. இவர் 1949ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி கிழக்குத் திமோர் தலைநகர் திலியில் பிறந்தவர். இவரின் தாய் கிழக்கு திமோரையும், தந்தை போர்த்துக்கல் நாட்டையும் சேர்ந்தவர்கள். ஏனெனில் போர்த்துக்கீசிய சர்வாதிகாரி Salazar என்பவரால் அப்போதைய போர்த்துக்கீசிய திமோருக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார் ராமோஸின் தந்தை. Soibada என்ற கிராமத்தில் கத்தோலிக்கப் பள்ளியில் பயின்ற இவர், FRETILIN அமைப்பை நிறுவியவர். ஹாக் அனைத்துலக சட்ட நிறுவனத்தில் அனைத்துலக சட்டம் பயின்றவர். ஸ்டார்ஸ்பூர்க் பன்னாட்டு மனித உரிமைகள் நிறுவனத்தில் மனித உரிமைகள் சட்டம் பயின்றவர். நியுயார்க்கில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை கல்வியில் முதுகலை பட்டம் பெற்றவர். போர்த்துக்கீசியம், ஆங்கிலம், ப்ரெஞ்ச், இஸ்பானியம் மற்றும் கிழக்குத் திமோரில் பொதுவாகப் பேசப்படும் Tetum மொழிகளைச் சரளமாகப் பேசுபவர் ஹோசே மானுவேல் ராமோஸ் ஹோர்த்தா. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.