2015-10-06 16:34:00

வெற்றி வளைவு அழிக்கப்பட்டிருப்பது,மேற்குக்கு அச்சுறுத்தல்


அக்.06,2015. தொன்மையான பல்மைரா நகரின் "வெற்றி வளைவு" நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டிருப்பது, ஐ.எஸ். இஸ்லாமிய அரசு மேற்கத்திய நாடுகளுக்கு விடுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று அந்நாட்டுப் பேராயர் ஒருவர் கூறினார். 

சிரியாவின் வட பகுதியிலுள்ள பல்மைராவில், ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டு பழமையுடைய உரோமையர் பேரரசு காலத்தின் வெற்றி வளைவு நினைவுச் சின்னம் தவிடுபொடியாக்கப்பட்டிருப்பது குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் பேசிய அலெப்போ கல்தேய வழிபாட்டுமுறை பேராயர் Antoine Audo அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வு, சிரியாவுக்கு விடுக்கும் செய்தி அல்ல, மாறாக, இது அனைத்துலக சமுதாயத்திற்கு, குறிப்பாக, பழம்பெரும் சின்னங்களைப் பாதுகாப்பதில் மிகுந்த கவனம் செலுத்தும் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும், ஐரோப்பாவுக்கும் விடுக்கும் செய்தியாக இருக்கின்றது என்று மேலும் கூறினார் பேராயர் Audo.

மேலும், பல்மைரா "வெற்றி வளைவு" நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டிருப்பது குறித்து கண்டனம் தெரிவித்த யுனெஸ்கோ இயக்குனர் இரினா போகோவா அவர்கள், இந்த அழிவுச் செயல் போர்க் குற்றமாக நோக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

சிரியா மக்களின் அறிவு, தனித்துவம் மற்றும் வரலாற்றை அவமதிக்கும் ஐ.எஸ். அரசின் முயற்சிகளுக்கு எதிராகச் செயல்படுவதில் அனைத்துலக சமுதாயம் ஒன்றிணையுமாறு வலியுறுத்தியுள்ளார் போகோவா. 

இந்த நினைவு மண்டபம், கி.பி. 193க்கும் கி.பி.211க்கும் இடைப்பட்ட காலத்தில் உரோமைப் பேரரசர் Septimius Severusஆல் கட்டப்பட்டது என்று யுனெஸ்கோ கூறுகிறது.

ஐ.எஸ் அமைப்பின் தீவிரவாதிகள் ஏற்கனவே இந்த இடத்தில் இரண்டு தொன்மை வாய்ந்த கோவில்களை அழித்துவிட்டனர். யுனெஸ்கோ நிறுவனம், இந்த இரு கோயில்களையும் மிக முக்கியத்துவம் வாய்ந்த கலாச்சார மையங்கள் என்று கூறியுள்ளது.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.