2015-10-06 16:20:00

திருத்தந்தை:இறைவனின் கருணைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம்


அக்.06,2015. இறைவனின் இரக்கத்தை அனுமதிக்காத கடின இதயங்களை நாம்  கொண்டிருக்கிறோமா என்று ஆய்வு செய்வோம் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவாக்கினர் யோனாவின் அறிவிப்பின் பலனாக நினிவே நகர் மனந்திரும்பியதை விளக்கும் இந்நாளின் முதல் வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றினார்.

மனந்திரும்பிய நினிவே நகர் யோனாவின் போதனைக்கு நன்றி சொல்கின்றது, இது உண்மையிலேயே ஒரு புதுமைதான், ஏனெனில் இறைவனின் விருப்பத்திற்குப் பணிவதற்கு யோனா தனது பிடிவாதத்தைக் கைவிட்டார் என்று விளக்கினார் திருத்தந்தை. ஆயினும், இறைவனின் ஆவிக்குப் பணிந்திருக்காத இந்த மனிதர், நினிவேயின் மனமாற்றத்திற்குப் பின்னர் கோபமாக இருந்தார், உண்மையில் ஆண்டவர் யோனாவைக் கடிந்துகொண்டார் என்றும் திருத்தந்தை கூறினார்.

யோனா மற்றும் நினிவேயின் கதை பற்றிக் கூறும் மூன்று பிரிவுகளில், முதலில் யோனா ஆண்டவர் தனக்குக் கொடுத்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தார், பின்னர் ஆண்டவருக்குப் பணிந்தார், மூன்றாவதாக, நினிவேயின் மனமாற்றத்திற்குப் பின்னர் இறைவனின் கருணைக்கு எதிர்ப்பு இருந்தது என்றும், இயேசுவின் கருணையும் மறைநூல் அறிஞர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.  

இதயம் கடினமாக இருந்தால், இறைவனின் கருணை அந்த இதயத்துக்குள் நுழைய முடியாது என்று மறையுரையாற்றிய திருத்தந்தை, இறைவன் எங்கே இருக்கிறாரோ அங்கே கருணையும், இரக்கமும் இருக்கின்றன என்றும், இரக்கத்தின் ஜூபிலி ஆண்டு அண்மித்து வரும் இவ்வேளையில் நம் ஆண்டவரின் இரக்கத்தைப் புரிந்து கொள்ள வரம் கேட்போம் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.