2015-10-05 16:37:00

வாரம் ஓர் அலசல் – உலகில் ஒவ்வொரு குடும்பமும் ஒரு விளக்கு


அக்.05,2015. சில நாள்களுக்கு முன்னர் உரோம் நகரில் ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் தாதியர் ஒருவர் தனது 9 வயது மகன் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து, தன்னிடம் கூறியதை இப்படிச் சொன்னார்... அம்மா, அந்தப் பையனுக்கு மட்டும் அப்பாவும் அம்மாவும் வந்து கூட்டிச் செல்கின்றனர், மற்ற எங்களுக்கெல்லாம் அம்மா அல்லது அப்பா மட்டுமே வருகின்றனர், அது ஏன்? என்று கேட்டது பற்றி பகிர்ந்துகொண்ட அந்தத் தாய் மேலும் சொன்னார், ஒரு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் பள்ளியில் படித்தபோது, எனது வகுப்பில் ஒரு பையனுக்கு மட்டுமே அப்பாவும் அம்மாவும் பிரிந்து வாழ்ந்தனர், ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது என்று சொன்னார். இப்போதெல்லாம் இருபது இருபத்தைந்து மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில் ஒரு சில மாணவருக்கு மட்டுமே பெற்றோர் சேர்ந்து வாழும் நிலை உருவாகியுள்ளது என்று கவலையோடு கூறினார். அன்பர்களே, இக்காலத்தில் பல குடும்பங்களின் நிலை இதுதான். இந்நிலை இன்றைய உலக சமுதாயத்திற்கும், திருஅவைக்கும் முக்கிய சவாலாக உள்ளது. சமுதாயத்தில் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் திருமணம் மற்றும் குடும்பங்களின் முக்கியத்துவம் பற்றி திருத்தந்தையரும், திருஅவையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். “திருஅவையிலும், உலகிலும் குடும்பத்தின் அழைப்பும், பணியும்” என்ற தலைப்பில் இத்திங்களன்று 14வது உலக ஆயர்களின் மாமன்றமும் வத்திக்கானில் தொடங்கியுள்ளது. இத்திங்கள் காலை 9 மணிக்கு, மூன்று வாரங்கள் கொண்ட இந்த மாமன்றத்தின் முதல் பொது அமர்வில் தொடக்க உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூன்று வாரங்கள் கொண்ட இந்த மாமன்றத்தில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் வெறுமனே பேசுவதோடு மட்டும் நில்லாமல், 120 கோடி உறுப்பினர்களைக் கொண்ட திருஅவைக்காக இறைவன் பேச விரும்புவதற்குச் செவிமடுக்க முயற்சிக்க வேண்டும், ஆயர்கள் மாமன்றம், ஓர் உடன்பாட்டுக்கு வருகின்ற ஒரு மாநாடோ, விருந்தினரை உபசரிக்கும் ஓர் அறையோ, ஒரு பாராளுமன்றமோ அல்லது ஒரு செனட் அவையோ அல்ல, மாறாக, மாமன்றம், திருஅவையின் ஒரு வெளிப்பாடு, திருஅவை, விசுவாசக் கண்களோடும், இறைவனின் இதயத்தோடும் உண்மையைக் கண்டறிவதற்கு ஒன்று சேர்ந்து செல்வதாகும். இந்த மாமன்றம், தூய ஆவியின் தூண்டுதலுக்குச் செவிமடுக்கும் இடமாகும். கிறிஸ்தவ விசுவாசம் ஓர் அருங்காட்சியகம் அல்ல, ஆனால் இது உள்தூண்டுதல் பெறுவதற்கான ஊற்று, நம் கிறிஸ்தவ வாழ்வை நினைவுகளின் அருங்காட்சியகமாக ஆக்காமல், வாழ்வைக் கொணருவற்குத் துணிச்சலைக் கொண்டிருக்க வேண்டும். இதில் கலந்து கொள்ளும் ஆயர்கள், திருத்தூதர்களின் துணிச்சலையும், நற்செய்தி கூறும் மனத்தாழ்மையையும், விசுவாசம் நிறைந்த செபத்தையும் கொண்டிருக்க வேண்டும். இம்மாமன்றப் பிரதிநிதிகள், தங்களின் தனிப்பட்ட முற்சார்பு எண்ணங்களைப் புறந்தள்ளி, இறைவனால் தாங்கள் வழிநடத்தப்பட தங்களை அனுமதிக்க வேண்டும் என்றெல்லாம் குடும்பம் குறித்த 14வது உலக ஆயர்களின் மாமன்றத்தில் கலந்துகொள்ளும் ஏறக்குறைய 300 பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், இஞ்ஞாயிறு காலை 11 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், இந்த மாமன்றத்தில் கலந்துகொள்ளும், 270 மாமன்றத் தந்தையருடன் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றி இம்மான்றத்தை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். தனிமை, ஓர் ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே நிலவும் அன்புப் பிணைப்பு, குடும்பம் ஆகிய தலைப்புகளில்  மறையுறையாற்றினார் திருத்தந்தை.

படைப்பு வரலாறு பற்றி விளக்கும் விவிலியத்தின் தொடக்க நூல், இறைவன் ஏவாளைப் படைப்பதற்கு முன்னர் ஆதாமின் தனிமை அனுபவம் பற்றிப் பேசுகின்றது. ஏதேன் தோட்டம் மற்றும் பிற அனைத்துப் படைப்புகளை ஆள்வதற்கு ஆதாமுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆயினும், ஆதாம் தனக்கு ஏற்ற உதவியாளரைக் காணவில்லை. அதனால் அவர் தனிமையாய் இருந்தார். இன்றைய நம் நவீன சமுதாயத்திலும் தனிமையின் பல்வேறு வடிவங்கள் உள்ளன. தாராளமயமாக்கப்பட்ட இன்றைய உலகில், வானளாவியக் கட்டடங்களும், ஆடம்பர மாளிகைகளும் நிரம்பியிருந்தாலும், குடும்பங்களுக்குள் அன்பு நிறைந்த இதமான சூழல் குறைந்து வருகிறது. மக்கள் பெரிய பெரிய இலக்குகளையும், பலவிதமான பொழுதுபோக்குகளையும் கொண்டிருந்தாலும், அவற்றை அனுபவிப்பதற்குச் சிறிதளவு நேரத்தையே அல்லது சுதந்திரத்தையே கொண்டிருக்கின்றனர். உள்ளத்தில் ஓர் ஆழமான வெறுமை ஏற்பட்டு அது வளர்ந்தும் வருகிறது. தன்னலம், மனச்சோர்வு, அழிவை ஏற்படுத்தும் வன்முறை, பணத்திற்கும், வீண் ஆடம்பர இன்பங்களுக்கும் அடிமையாதல் போன்றவைகளால் ஆட்கொள்ளப்படும் மனிதரின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க, தனிமையை உணர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. ஆதாமைப் போன்று இன்றைய உலகம் அதிகாரத்தை அனுபவிக்கின்றது. அதேநேரம், நலிந்த நிலையையும், தனிமையையும் அனுபவிக்கின்றது. இது இன்றைய நவீனக் குடும்பங்ளிலும் காணப்படுகின்றது. உறுதியான மற்றும் பலனுள்ள அன்பைக் கட்டியெழுப்புவதில் மக்கள் குறைவான ஆர்வத்தையே காட்டுகின்றனர். நீடித்த, நிலைத்திருக்கக்கூடிய, மனச்சான்றுக்கு ஒத்த, விசுவாசமான அன்பைக் கட்டியெழுப்புவது, மதிப்புக் குறைவாகவும், கடந்தகால நிகழ்வாகவும் நோக்கப்படுவது அதிகரித்து வருகின்றது. அதிக வளர்ச்சியடைந்த சமூகங்களில் மிகக் குறைவான பிறப்பு விகிதமும், மிக அதிகமான விகிதத்தில் கருக்கலைப்பு, திருமண முறிவு, தற்கொலை, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மாசுகேடு இடம்பெறுவதாகத் தெரிகின்றது. ஆனால் இறைவன், ஆதாமின் தனிமையைப் பார்த்து வருந்தி ஆதாமுக்கு ஏற்ற துணையைப் படைத்தார். துன்பத்திலும், தனிமையிலும் வாழ்வதற்காக நம்மை இறைவன் படைக்கவில்லை. இறைவன் ஆண்களையும் பெண்களையும் மகிழ்வாக வாழவும், அன்பு கூரவும், அன்பு கூரப்படவும், அவர்களின் அன்பு குழந்தைகளில் கனிகளைக் கொணரவும் வேண்டுமென்று படைத்தார். திருமண முறிவு குறித்து பரிசேயர் இயேசுவிடம் கேள்வி கேட்டபோது, இயேசு அவர்கள் எதிர்பாராத விதமாகவும், நேரிடையாகவும் படைப்பின் தொடக்கத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றார். இவ்வாறு செய்ததன் வழியாக, இறைவன் மனித அன்பை ஆசிர்வதிக்கிறார் என்று இயேசு நமக்குப் போதிக்கிறார். அன்புகூரும் இருவரின் இதயங்களை ஒன்றிணைத்து, அவர்களை ஒன்றிப்பிலும், இணைபிரியாத் தன்மையிலும் இணைத்து வைப்பவர் இறைவன். திருமணம் என்பது, ஏதோ வளர்இளம்பருவ கற்பனை உலகு அல்ல. ஓர் ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே நிலவும் அன்புப் பிணைப்பு இறைவன் வகுத்துள்ள திட்டத்தின் அடித்தளமாக அமைந்துள்ளது, இறைவன் தமது அன்புப் படைப்புக்காக கொண்டுள்ள கனவு இதுவே. கடும் சமூக மற்றும் திருமண வாழ்வுச் சூழலில், திருஅவை, தனது பணியை, பற்றுறுதியிலும், உண்மையிலும், அன்பிலும் வாழ அழைக்கப்பட்டுள்ளது என்று மறையுரையாற்றிய திருத்தந்தை, குடும்பத்தின் பங்கு பற்றியும் விளக்கினார். திருஅவையில் நடைபெறும் ஆயர்கள் மாமன்றத் தந்தையருக்காகச் செபித்து மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளது போல, இந்த நவீன உலகில் பிரிந்து வாழும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பிள்ளைகளே. திருமண முறிவடைந்துள்ள தனது பெற்றோரால் பாதிக்கப்பட்டுள்ள ஆறு வயது குட்டி தேவதை ஒன்று தனது தாய்க்குக் கூறிய இதயத்தை உருக்கும் அறிவுரை அல்லது வேண்டுகோள் மனிதன் இணைய பக்கத்தில் வெளியாகியிருந்தது. கானடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஆறு வயது ரீனா, தனது பெற்றோர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டபோது இடையில் புகுந்து தனது தாயை செரிஷ் செரியை உள்ளே அழைத்துச் சென்று படிக்கட்டுகளில் அமர்ந்த வண்ணம் அவர முன்னாள் கணவருடன் ஒத்து போகுமாறு மன்றாடியிருக்கிறார். அம்மா, நீங்கள் எனது தந்தையுடன் நண்பனாக இருக்கத் தயாரா என்று கேட்க தாயும் ஆம் என பதிலளித்தார். கைகளால் சைகை காட்டி, உயரப் போக முயற்சிக்காமல் நண்பர்களாக இருக்க முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். எனது தந்தையும் தாயும் ஒரே இடத்தில் நண்பர்களாக இருப்பதை நான் விரும்புகிறேன். எல்லோரும் நண்பர்களாக இருக்க வேண்டும். என்னால் நல்லவளாக இருக்க முடியுமானால் எல்லாராலும் நல்லவர்களாக இருக்க முடியும் என்று சிறுமி கூறிய இந்த அறிவுரைகள் தன்னை அழவைத்ததாகவும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் ஷெரி முகநூலில் பதிவுசெய்துள்ளார். அன்பர்களே, தங்களின் பெற்றோர் சேர்ந்து வாழ வேண்டுமென்பதே பிள்ளைகளின் ஆவல். இந்த ஆவலை பிரிந்து வாழும் பெற்றோர் உணர்ந்து திருந்த வேண்டும் என்பதே எம் ஆவல்.

“திருஅவையிலும், உலகிலும் குடும்பத்தின் அழைப்பும், பணியும்” என்ற தலைப்பில் அக்டோபர் 04, இத்திங்கள் முதல் 25ம் தேதி வரை 14வது உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறுகின்றது. இம்மாமன்றத்திற்குத் தயாரிப்பாக கடந்த சனிக்கிழமை மாலையில் நடந்த திருவிழிப்பு வழிபாட்டில், இருளில் சிறிய மெழுகுதிரியை ஏற்றுவது எத்துனை நல்லது. இருளை விரட்டுவதற்கு இதைவிடச் சிறந்த வழி இருக்கின்றதா? இருளைப் போக்க முடியுமா? என்ற கேள்விகளுடன் மறையுரையைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். முதுபெரும்தந்தை அத்தனகோரஸ் அவர்கள் நமக்கு நினைவுபடுத்தியுள்ள போன்று, தூய ஆவியார் இல்லாத வாழ்வில் இறைவன் தூரமாக இருக்கிறார், கிறிஸ்து கடந்த காலத்தில் இருக்கிறார், திருஅவை வெறும் நிறுவனமாக இருக்கின்றது, அதிகாரம் ஆதிக்கமாக, மறைப்பணி அறிவிப்பாக, கிறிஸ்தவ வாழ்வு அடிமைகளின் நன்னெறியாக மாறுகிறது. எனவே தூய ஆவியாரிடம் செபிப்போம். இறைவன் நம் வாழ்வுக்காக வைத்துள்ள திட்டத்தை உணர்ந்து, நம்பிக்கையோடு அதை ஏற்பதற்குக் கற்றுக்கொள்ளும் இடம் குடும்பம். இது, நன்றியுணர்வு, உடன்பிறப்பு உணர்வின் பிரசன்னம் மற்றும் தோழமையின் இடம். நாம் நம்மைவிட்டு வெளியே வந்து பிறரை ஏற்கவும், மன்னிக்கவும், மன்னிப்புப் பெறவும் கற்றுக்கொள்ளும் இடம் குடும்பம். ஒவ்வொரு குடும்பமும் அது எந்நிலையில் இருந்தாலும், இந்த உலகின் இருளின் மத்தியில் எப்போதும் ஒளியாக உள்ளது. இதை ஏற்று, குடும்பத்தில் உள்ள அழகு, நன்மை, புனிதம் ஆகியவற்றை மாமன்றத் தந்தையர் அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். குடும்பங்களின் கடினமான சூழல்களையும் உணர வேண்டும்.  போர், நோய், துன்பம், காயம்பட்ட உறவுகள் மற்றும் முறிவுகள், மனச்சோர்வையும், பிரிவையும், மனத்தளர்ச்சியையும் உருவாக்குகின்றன. உலக ஆயர்கள் மாமன்றம், இக்குடும்பங்களின் நிலைகளை உணர்வதாக. நாசரேத் திருக்குடும்பத்தையும் நோக்குவோம். திருக்குடும்பத்திடமிருந்து குடும்பம் பற்றிக் கற்றுக்கொள்வோம். வளமையும், மனிதமும் நிறைந்த அனுபவமாக திருமணம் மற்றும் குடும்பம் வெளிப்படுத்தப்பட வேண்டும். பல்வேறு சூழல்களில் நற்செய்தியின் புனிதம் வாழ்ந்து காட்டப்படும் குடும்பத்திற்காகச் செபிப்போம். குடும்பம் குறித்த இம்மாமன்றத்திற்காகத் தூய ஆவியாரிடம் தொடர்ந்து செபிப்போம் என்று விண்ணப்பித்துள்ள திருத்தந்தையுடன் சேர்ந்து செபிப்போம்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.