2015-10-05 17:21:00

துன்பத்தில்,தனிமையில் வாழ்வதற்காக இறைவன் நம்மை படைக்கவில்லை


அக்.05,2015. தாராளமயமாக்கப்பட்ட இன்றைய உலகில், வானளாவியக் கட்டடங்களும், ஆடம்பர மாளிகைகளும் நிரம்பியிருந்தாலும், குடும்பங்களுக்குள் அன்பு நிறைந்த இதமான சூழல் குறைந்து வருகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறன்று வழங்கிய மறையுரையில் கூறினார்.

இஞ்ஞாயிறு காலை 11 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், இந்த மாமன்றத்தில் கலந்துகொள்ளும், 270 மாமன்றத் தந்தையருடன் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றி இம்மான்றத்தை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தனிமை, ஓர் ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே நிலவும் அன்புப் பிணைப்பு, குடும்பம் ஆகிய தலைப்புகளில்  மறையுறையாற்றினார் திருத்தந்தை.

மக்கள் பெரிய பெரிய இலக்குகளையும், பலவிதமான பொழுதுபோக்குகளையும் கொண்டிருந்தாலும், அவற்றை அனுபவிப்பதற்குச் சிறிதளவு நேரத்தையே அல்லது சுதந்திரத்தையே கொண்டிருக்கின்றனர் என்றும், உள்ளத்தில் ஓர் ஆழமான வெறுமை ஏற்பட்டு அது வளர்ந்தும் வருகிறது என்றும் தன் மறையுரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை.

தன்னலம், மனச்சோர்வு, அழிவை ஏற்படுத்தும் வன்முறை, பணத்திற்கும், வீண், ஆடம்பர இன்பங்களுக்கு அடிமையாதல் போன்றவற்றால் ஆட்கொள்ளப்படும் மனிதரின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க, தனிமையை உணர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது என்று திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

அதிக வளர்ச்சியடைந்த சமூகங்களில் மிகக் குறைவான பிறப்பு விகிதமும், மிக அதிகமான விகிதத்தில் கருக்கலைப்பு, திருமண முறிவு, தற்கொலை, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மாசுகேடு இடம்பெறுவதாகத் தெரிகின்றது என்ற தன் கவலைகளை மறையுரையில் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை.

திருமணம் என்பது, ஏதோ வளர்இளம்பருவ கற்பனை உலகு அல்ல என்று கூறிய திருத்தந்தை, ஓர் ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே நிலவும் அன்புப் பிணைப்பு இறைவன் வகுத்துள்ள திட்டத்தின் அடித்தளமாக அமைந்துள்ளது என்றும், இறைவன் தமது அன்புப் படைப்புக்காக கொண்டுள்ள கனவு இதுவே என்றும் வலியுறுத்தினார்.

கடும் சமூக மற்றும் திருமண வாழ்வுச் சூழலில், திருஅவை, தனது பணியை, பற்றுறுதியிலும், உண்மையிலும், அன்பிலும் வாழ அழைக்கப்பட்டுள்ளது என்று மறையுரையாற்றிய திருத்தந்தை, குடும்பத்தின் பங்கு பற்றியும் விளக்கினார்.

திருஅவையில் நடைபெறும் 14வது ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்கும் தந்தையருக்காகச் செபித்து, தன் மறையுரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.