2015-10-05 16:32:00

கடுகு சிறுத்தாலும் - மனித வாழ்க்கை ஒரு காடு போன்றது


ஒரு நாள் ஒரு செல்வந்தர் காட்டு வழியே போய்க் கொண்டிருந்தார். வழிப்பறிக் கொள்ளையர்கள் அவரிடம் ஓடி வந்து, மரியாதையா வச்சிருக்கிற எல்லாத்தையும் கொடுத்திடு என்று மிரட்டினார்கள். இவரும் உயிருக்குப் பயந்து தான் வைத்திருந்த எல்லாவற்றையும் எடுத்துக் கொடுத்தார். எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு ஓடிப்போகும் நேரத்தில் ஒரு திருடர் மற்ற இருவரிடம், இவனை உயிரோடு விட்டு வைப்பதில் இலாபம் இல்லை என்று சொல்லிக்கொண்டே கத்தியைக் கையில் எடுத்தார். ஆனால் அடுத்த திருடர், வேண்டாம், இவரைக் கொல்வதால் நமக்கென்ன இலாபம், அதனால் இவரின் கை கால்களைக் கட்டி இங்கேயே போட்டுவிட்டுச் சென்று விடுவோம் என்றார். மூன்று பேரும் சேர்ந்து அந்தச் செல்வந்தரைக் கட்டி சாலையோரமாகப் போட்டுவிட்டுச் சென்று விட்டார்கள். சிறிது நேரம் சென்று மூன்றாவது திருடர் திரும்பி வந்து அந்தச் செல்வந்தரை, இரக்கமுடன் பார்த்து, உனக்கு வலிக்கிறதா என்று கேட்டு, கட்டுகளை அவிழ்த்து விட்டார். பின்னர், என்னோடு வா, உனக்கு வழி காட்டுகிறேன் என்று அழைத்துக்கொண்டு போனார். சிறிது தூரம் நடந்த பின்னர், அதோ பார், அதுதான் உனது வீடு, போ என்று கையைக் காட்டினார். அந்தத் திருடருக்கு நன்றி சொன்ன அந்தச் செல்வந்தர், நீயும் என்னோடு வா, எனது வீட்டார் மகிழ்ச்சியடைவர் என்று அழைத்தார். அதற்கு அந்தத் திருடர், இல்லை. உங்களோடு வரக்கூடிய தகுதி எனக்கில்லை, வந்தால் காவலர்கள் பிடித்துக் கொள்வார்கள் என்று சொல்லித் தன் வழியே சென்றார். அன்பர்களே, இந்தக் கதையைச் சொன்ன ஸ்ரீ இராம கிருஷ்ணர், மனித வாழ்க்கையும் ஒரு காடு போன்றது, இந்த மூன்று திருடர்களின் குணங்கள் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உள்ளன என்று விளக்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.