2015-10-05 17:27:00

உலகின் இருளின் மத்தியில் குடும்பம் எப்போதும் ஒளியாக உள்ளது


அக்.05,2015. இருளில் சிறிய மெழுகுதிரியை ஏற்றுவது எத்துணை நல்லது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இருளை விரட்டுவதற்கு இதைவிடச் சிறந்த வழி இருக்கின்றதா? இருளைப் போக்கமுடியுமா? என்ற கேள்விகளுடன் தன் மறையுரையைத் தொடங்கினார்.

வத்திக்கானில், இஞ்ஞாயிறன்று துவங்கியுள்ள 14வது ஆயர்கள் மாமன்றத்திற்குத் தயாரிப்பாக, சனிக்கிழமை மாலை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் பல்லாயிரம் மக்கள் முன்னிலையில் நடைபெற்ற திருவிழிப்பு வழிபாட்டில் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

இறைவன் நம் வாழ்வுக்காக வைத்துள்ள திட்டத்தை உணர்ந்து, நம்பிக்கையோடு அதை ஏற்பதற்குக் கற்றுக்கொள்ளும் இடம் குடும்பம் என்று கூறியத் திருத்தந்தை,  நன்றியுணர்வு, உடன்பிறப்பு உணர்வின் பிரசன்னம் மற்றும் தோழமையின் இடம் குடும்பம் என்பதையும், பிறரை ஏற்கவும், மன்னிக்கவும், மன்னிப்புப் பெறவும் கற்றுக்கொள்ளும் இடம் குடும்பம் என்பதையும், வலியுறுத்தினார்.

ஒவ்வொரு குடும்பமும், அது எந்நிலையில் இருந்தாலும், இவ்வுலக இருளின் மத்தியில் எப்போதும் ஒளியாக உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இதை ஏற்று, குடும்பத்தில் உள்ள அழகு, நன்மை, புனிதம் ஆகியவற்றை மாமன்றத் தந்தையர் அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

குடும்பங்கள் சந்திக்கும் கடினமான சூழல்களை எடுத்துரைத்தத் திருத்தந்தை, போர், நோய், துன்பம், காயம்பட்ட உறவுகள் மற்றும் முறிவுகள், மனச்சோர்வையும், பிரிவையும், மனத்தளர்ச்சியையும் உருவாக்குகின்றன என்று கூறினார்.

குடும்பம் குறித்த இம்மாமன்றத்திற்காகத் தூய ஆவியாரிடம் தொடர்ந்து செபிப்போம் என்ற விண்ணப்பத்துடன் திருத்தந்தை தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.