2015-10-03 15:55:00

பசிக்கொடுமை,மனிதரின் வாழ்வுக்கும் மாண்புக்கும் அச்சுறுத்தல்


அக்.03,2015. இக்காலத்தில் எண்ணற்ற ஆண்கள், பெண்கள், சிறார் மற்றும் வயதானவர்களின் வாழ்வு மற்றும் மாண்புக்கு அச்சுறுத்தலாக உள்ள பசிக்கொடுமை, உண்மையிலேயே இழிவானது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

உணவு வங்கி என்ற பிறரன்பு அமைப்பு உருவாக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அந்த அமைப்பின் ஏழாயிரம் பேரை இச்சனிக்கிழமையன்று வத்திக்கான் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.

பசிக்கொடுமை என்ற இந்த அநீதியை நாம் ஒவ்வொரு நாளும் சந்திக்க வேண்டியிருக்கின்றது, உணவுப் பொருள் வளங்கள் நிரம்ப உள்ள ஓர் உலகில், ஏழை நாடுகளில் மட்டுமல்ல, பணக்கார மற்றும் வளர்ந்த நாடுகளிலும், வாழ்வதற்குத் தேவையானவை அடிப்படை வசதிகளின்றி எண்ணற்ற மக்கள் உள்ளனர் என்றும் கூறினார் திருத்தந்தை.      

ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கும் நூற்றுக்கணக்கான மக்களோடு உணவைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது, தங்களின் வேதனைகளோடு, சிலநேரங்களில் தாங்க முடியாத துன்பங்களோடு இருக்கும் இவர்களும் மனிதர்கள் என்பதை மறந்துவிட வேண்டாமெனக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போர்கள் மற்றும் வன்முறையால் தங்கள் சொந்த நாடுகளைவிட்டு வெளியேறும் எண்ணற்ற புலம்பெயர்ந்தோரால் ஐரோப்பாவில் பசியால் வாடுவோரின் நிலை மேலும் மோசமடைந்துள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பசித்திருப்போருக்கு உணவளிப்பதற்கு நம் இதயங்களில் இடமளிக்குமாறு இயேசு நம்மை அழைக்கிறார் என்றும், திருஅவை தனது இரக்கப் பணிகளில் ஒன்றாக இதை வைத்திருக்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை.

Sir Danilo Fossati, அருள்பணி  Luigi Giussani ஆகிய இருவரால் 1989ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட உணவு வங்கி(Banco Alimentare) என்ற அமைப்பு, இத்தாலியில் மிஞ்சும் உணவுப் பொருள்கள் மற்றும் பயன்படுத்தப்படாத உணவுப் பொருள்களைப் பெற்றுப் பகிர்வதை ஊக்குவித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய இரண்டாயிரம் தன்னார்வப் பணியாளர்கள், பயன்படுத்தப்படாத உணவுப் பொருள்களை இருபது இலட்சம் மக்களுக்கு விநியோகித்து வருகின்றனர்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.