2015-10-03 16:31:00

ஏழைகளுக்கு உணவு கிடைப்பதற்கு ஆதரவாக இயேசு சபை அருள்பணியாளர்


அக்.03,2015. அனைவருக்கும் போதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்கு, தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை(NFSA) மேற்கு வங்காள அரசு செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி உணவுக்கான உரிமை மற்றும் தொழில்(RTF) என்ற திட்டத்தை ஆரம்பித்துள்ளார் இந்திய இயேசு சபை அருள்பணியாளர் ஒருவர்.

இயேசு சபை அருள்பணியாளரும், இந்திய துறவு சபைகள் அவைத் தலைவருமான, ஜோதி அவர்கள், உணவுக்கான உரிமைத் திட்டத்தை உருவாக்கி நடத்தி வருகிறார். இந்நடவடிக்கையில், அரசு-சாரா அமைப்புகளும் இணைந்துள்ளன.

தொழிலாளருக்குப் போதுமான ஊதியத்தை உறுதிப்படுத்தல், உள்ளூர் உணவு உற்பத்தியை மேம்படுத்தல், தாய்மைப்பேறுகாலத்தில் சலுகைகள் வழங்கல் போன்றவற்றுக்கு அரசு அதிகாரிகள் உறுதி வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகள் இந்நடவடிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. 

RTF திட்ட நடவடிக்கைகள் இம்மாதம் 9ம் தேதி வரை தொடரும் என்று ஆசிய செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அருள்பணி ஜோதி அவர்கள், பல மாவட்டங்களில் மக்கள்  பட்டினியால் வாடுகின்றனர், ஆனால் ஊடகங்கள் இந்நிலை குறித்து அறிவிக்கத் தவறியுள்ளன என்று கூறியுள்ளார்.

மேற்கு வங்காள மாநிலத்தின் 12 மாவட்டங்களில், அறுவடை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது, இது கடும் உணவுப் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளது என்றும், அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லையெனில் இந்நிலை பஞ்சத்தில் கொண்டுபோய் விடும் என்றும் கூறினார் அருள்பணி ஜோதி.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.