2015-10-02 15:33:00

பொதுக்காலம் 27ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


அக்டோபர் 4, இஞ்ஞாயிறு, ஆயர்களின் 14வது பொது மாமன்றம் வத்திக்கானில் துவங்குகிறது. "திரு அவையிலும், இன்றைய உலகிலும் குடும்பத்தின் அழைப்பும், பணியும்" என்பது, மாமன்றத்தின் மையக்கருத்தாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 360 பேர் பங்கேற்கும் இம்மாமன்றத்தில், திருத்தந்தையின் சிறப்பான அழைப்பை ஏற்று, உலகின் பல நாடுகளிலிருந்து வந்திருக்கும், 18 தம்பதியர் உட்பட, 51 பொதுநிலையினர் கலந்துகொள்கின்றனர்.

திருஅவை என்றால், இறைமக்கள் என்பதும், திருஅவையி்ன் அடித்தளம் குடும்பங்கள் என்பதும், அண்மைய ஆண்டுகளில் சக்திவாய்ந்த முறையில் உணரப்படும் உண்மை. இந்த உண்மையை ஆழப்படுத்த, இஞ்ஞாயிறு முதல் ஆரம்பமாகும் ஆயர்கள் பொது மாமன்றம், பயனுள்ள பரிமாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என்று இறைவனிடம் உருக்கமாக வேண்டுவோம்.

குடும்பம் என்ற கருப்பொருளுடன், ஆயர்களின் பொது மாமன்றம் துவங்கும் இந்த ஞாயிறன்று, திருமணத்தை மையப்படுத்தி நமது ஞாயிறு வாசகங்கள் அமைந்திருப்பது, இறைவன் நமக்குக் காட்டும் ஓர் அருள் அடையாளமாகக் கருதலாம்.

அருள்பணியாளனான எனக்கு, திருமணம், குடும்பம் இவற்றைப் பற்றி பேச என்ன தகுதி உள்ளது என்று, எனக்குள், அவ்வப்போது கேள்வி எழுவதுண்டு. நானும் ஒரு குடும்பத்தில் பிறந்தவன் என்பதும், என் உடன்பிறந்தோர் குடும்ப வாழ்வை மேற்கொண்டுள்ளனர் என்பதும், எனக்கு இந்தத் தகுதியைத் தந்துள்ளதாக, நான் எனக்கே சமாதானம் சொல்லிக்கொள்வதுண்டு. அந்தத் தகுதியின் அடிப்படையில், திருமணம், குடும்பம் இவற்றைப்பற்றி என் எண்ணங்களை உங்கள் முன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

திருமணத்திற்கு நாள் குறிக்க, ஓர் இளைஞன், பங்குத்தந்தையைத் தேடிச் சென்றார்.  பொதுவாக, கிறிஸ்தவத் திருமணங்களுக்கு முன்னால், மாப்பிள்ளை, பெண் இருவருக்கும் மறைகல்வி எவ்வளவு தெரிந்திருக்கிறதென பங்குத்தந்தை சோதிப்பார். எனவே, திருமணத் தேதியைக் குறிக்க வந்த இளைஞனிடம், பங்குத்தந்தை, “இயேசு, திருமணத்தைப்பற்றி ஏதாவது சொல்லியிருக்கிறாரா?" என்று கேட்டார். சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த அவ்விளைஞன், "ம்.. சொல்லியிருக்கார் சாமி" என்று கூறவே, பங்குத்தந்தை, "என்ன சொல்லியிருக்கிறார்?" என்று அடுத்தக் கேள்வியைத் தொடுத்தார். அவர் என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலோடு பங்குத்தந்தை காத்திருந்தார். இளைஞன், சிறிதும் தயக்கமின்றி, “‘தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்’ என்று இயேசு சொல்லியிருக்கிறார்" என்று பெருமையுடன் சொல்லி முடித்தார். பங்குத்தந்தை அதிர்ச்சியில் வாயடைத்து நின்றார்.

வேடிக்கைத் துணுக்குகள் சிரிப்பதற்கு மட்டுமல்ல, சிந்திப்பதற்கும் உதவும் என்பதை நாம் மறுக்க இயலாது. குடும்ப வாழ்வின் அடித்தளமான திருமணத்தை அறிந்து செய்கிறோமா? அறியாமல் செய்கிறோமா? எவற்றையெல்லாம் அறிந்து செய்கிறோம்? எவற்றையெல்லாம் அறியாமல் செய்கிறோம்? இவை, நாம் சிந்திக்கவேண்டிய கேள்விகள்...

குலம், கோத்திரம், நாள், நட்சத்திரம் இவையனைத்தும் பொருந்தி வருகின்றனவா என்று ஏகப்பட்ட ஆராய்ச்சியையும், படிப்பு, தொழில், சம்பளம், சொத்துக்கள் என்று ஒரு நீண்ட கணக்கையும் செய்கிறோம். எவ்வளவு தருவது, எவ்வளவு பெறுவது என்று ஒரு வியாபார ஒப்பந்தம் மேற்கொள்கிறோம். திருமண வாழ்வை மேற்கொள்வதற்கு முன் எதை நாம் அறிய வேண்டும்?

பழைய திரைப்படப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. "கட்டடத்துக்கு மனைப் பொருத்தம் அவசியம். காதலுக்கு மனப் பொருத்தம் அவசியம்." மனப் பொருத்தம் நம்மில் எத்தனைப் பேர் பார்க்கிறோம்? இனம், குலம், மதம், பணம் என்று எத்தனையோ பொருத்தங்கள் பார்க்கும் நாம், குணம், மனம் இவற்றின் பொருத்தம் பார்ப்பது, மிகவும் அரிது. மனம், குணம் இவை பொருந்தவில்லை என்றால், போகப் போகச் சரியாகிவிடும் என்று, நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். மனம், குணம் இவற்றில் என்னதான் பொருத்தம் பார்த்தாலும், நாளுக்கு நாள் மாறக்கூடிய இவற்றிற்கு என்ன உத்தரவாதம்? மனம், குணம் இவற்றைப் புரிந்துகொண்டு, பல ஆண்டுகள் பழகியபின் மேற்கொள்ளப்படும் காதல் திருமணங்களில் கூட, இந்த உத்தரவாதம் இல்லையே.

உத்தரவாதத்தைப் பற்றி பேசும்போது, மற்றோர் எண்ணம் எழுகிறது. பொருட்களை வாங்கும்போது உத்தரவாதம் பார்த்து வாங்குகிறோம். தேர்ந்தெடுத்தப் பொருள் சரியில்லை என்றால், திருப்பிக் கொடுத்துவிட்டு, வேறு ஒன்று வாங்கி வருகிறோம். திருமண உறவில், வாழ்வில் இப்படி மாற்ற முடியுமா? இந்தக் கேள்விதான் இன்றைய நற்செய்திக்குப் பின்னணி.

சீடர்கள் கேட்கும் கேள்வி இது: "கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?" மனைவி ஏதோ ஒரு பொருள் போலவும், அந்தப் பொருளை ஆண்மகன் திருப்பிக் கொடுப்பது போலவும், இந்தக் கேள்வியின் தொனி அமைந்துள்ளது!

இந்தக் கேள்வியைப் புரிந்துகொள்ள, இஸ்ரயேல் சமுதாயத்தில், ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நிலவிய உறவைப் புரிந்துகொள்ளவேண்டும். யூதப் பாரம்பரியத்தில் திருமணம் ஓர் உயர்ந்த அர்ச்சிப்பு என்ற எண்ணம் இருந்தது. இதைக் குறித்து அறிவுரைகள் வழங்கிய மதத் தலைவர்கள், "திருமண முறிவு நிகழும்போது, கோவில் பீடமே கண்ணீர் வடிக்கும்" என்ற பாணியில் பேசினர். ஆனால், அந்த உன்னத இலட்சியம், நடைமுறைக்கு வந்தபோது, உருக்குலைந்து போனது. 

திருமண ஒப்பந்தத்தின் விளைவாக, மனைவி, கணவனின் உடைமைப் பொருளாகக் கருதப்பட்டார். பெண்ணின் உரிமையும், சுதந்திரமும் பறிபோயின.

மோசே தன் சட்டத்தின் வழியே இந்த அநீதியை ஓரளவு குறைக்க முயன்றார். மனைவியை விலக்கும்போது, அந்தப் பெண் மீண்டும் தன் உரிமைகளைப் பெறுவதற்கும், மறுமணம் செய்வதற்கும் ஏற்றவாறு, 'மணவிலக்குச் சான்றிதழ்' வழங்கச் சொன்னார். இதையே நாம் இணைச்சட்ட நூலில் இவ்வாறு வாசிக்கிறோம்:

இணைச்சட்டம் 24 1,2

ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளோடு கூடியபின், அவளது அருவருக்கத்தக்க செயலைக் கண்டு அவள்மேல் அவனுக்கு விருப்பமில்லாமற்போனால், அவன் முறிவுச் சீட்டு எழுதி, அவள் கையில் கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடுகிறான். அவள் அவனது வீட்டைவிட்டு வெளியே சென்று வேறொருவனுக்கு மனைவி ஆகிறாள்.

'அருவருக்கத்தக்க செயல்' என்று மோசே குறிப்பிட்டதை, பல வழிகளில் பொருள் கொண்டனர், மதத் தலைவர்கள். ஒரு பகுதியினர், இதற்கு, 'விபச்சாரம்' என்று பொருள் கொண்டனர். மற்றொரு பகுதியினரோ, பெண்ணின் தோற்றம், அவர் சமைக்கும் பாங்கு போன்றவை சரியில்லை என்றாலும், அவரை விலக்கிவிடலாம் என்று அறிவுரை கூறினர்.

இன்றைய உலகிலும் மணமுறிவு என்பது மிக, மிக சிறு காரணங்களால் உருவாவதை அவ்வப்போது செய்திகளாகக் கேட்டு வருகிறோம். மணமுறிவுக்காக நீதி மன்றத்தில் விண்ணப்பித்திருந்த தம்பதியரிடையே, இந்தியாவின் முன்னணி நாளிதழ் ஒன்று ஆய்வு நடத்தியது. மணமுறிவுக்கு அவர்கள் தந்த காரணங்கள் வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருந்தன.

"நான் செல்லும் விருந்துகளுக்கு என் மனைவி வருவதில்லை" என்று ஆணும், "நான் பொருள்கள் வாங்கச் செல்லும்போது, என் கணவன் உடன் வருவதில்லை" என்று பெண்ணும் சொல்லும் காரணம் துவங்கி, குறட்டை விடுதல், சாப்பாட்டுப் பழக்கங்கள் போன்ற விளையாட்டான காரணங்களும், ஒரு சில விபரீதமான காரணங்களும் இந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளன.

வளர்ச்சியடைந்துள்ள ஒரு நாட்டில், மனைவி, மணமுறிவுக்கு அளித்த காரணம், நம்பமுடியாத அளவு 'சில்லறைத் தனமாக' இருந்தது: "கணவன் எப்போதும் பற்பசையை எடுக்கும்போது, பற்பசை குழாயின் நடுவிலேயே அழுத்தி எடுக்கிறார்"  என்ற காரணத்தைச்  சொல்லி மணமுறிவுக்கு விண்ணப்பித்திருந்தார் என்று ஒரு நாளிதழில் கூறப்பட்டிருந்தது.

இதற்கு நேர் மாறாக, அன்றைய கால திருமணங்கள் அமைந்திருந்ததைப் பற்றி கதைகள் சொல்லப்பட்டுள்ளன. கார்களை உருவாக்கும் ஃபோர்ட் (Ford) நிறுவனத்தின் உரிமையாளர், ஹென்றி ­ஃபோர்ட் அவர்கள், திருமண வாழ்வில் 50வது ஆண்டை நிறைவு செய்தவேளையில், அவரிடம், "உங்கள் திருமண வாழ்வின் வெற்றிக்குக் காரணம் என்ன?" என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் தந்ததாகச் சொல்லப்படும் பதில் இது:  "என் திருமண வாழ்வும், என் கார் நிறுவனமும் வெற்றி அடைந்ததற்கு, ஒரே காரணம்தான் உள்ளது. நான் அடிக்கடி காரை மாற்றுவது கிடையாது. உள்ள காரை இன்னும் திறம்படச் செயலாற்றும் வழிகளைத் தேடிக் கண்டுபிடிப்பேன்."

அதிர்ச்சி வைத்தியம் வழியே, ஆழ்ந்த உண்மைகளை இயேசு அடிக்கடி சொல்லித்தந்தார் என்பதை நாம் அறிவோம். திருமணத்தின் புனிதத்தை உணராமல், பெண்ணை ஒரு பொருளெனக் கருதிய யூதர்களுக்கும், தன் சீடர்களுக்கும் இயேசு ஓர் அதிர்ச்சி வைத்தியம் தந்திருப்பார் என்பது என் கணிப்பு. அந்த வைத்தியத்திற்கு அவர் பயன்படுத்திய வார்த்தைகள் இவ்வாறு இருந்திருக்கலாம்: "கணவன் மனைவியை விலக்கி விடுவது முறையா என்று கேட்கிறீர்கள். சரி! மனைவி கணவனை விலக்கி விடுவது முறையா என்று நான் கேட்டால், என்ன பத்தி சொல்வீர்கள்?" இப்படி இயேசு கேட்டிருந்தால், அவர்கள் வாயடைத்துப் போயிருப்பார்கள்.

மற்றுமொரு சம்பவத்தை இங்கே கூற வேண்டும். யோவான் நற்செய்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது (யோவான் 8: 1-11). விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை, இயேசுவுக்கு முன் கொண்டு வந்து நிறுத்துகின்றனர், பரிசேயரும், மதத் தலைவர்களும். அவர்கள் சொல்லும் வார்த்தைகள்: "இப்பெண், விபச்சாரத்தில் கையும் களவுமாகப் பிடிபட்டவள். இவளைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும். நீர் என்ன சொல்கிறீர்?" என்பன. அவர்களுக்கும் இயேசு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்க வேண்டும். "விபச்சாரத்தில் கையும், களவுமாகப் பிடிபட்டவள் என்று சொல்கிறீர்கள், அந்த ஆண் எங்கே?" என்று கேட்டு, அவர்களைச் சங்கடத்தில் வாயடைக்கச் செய்திருக்கலாம். மாறாக, இயேசு குனிந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தார். வந்திருந்தவர் பாவங்களைத்தான் அவர் எழுதிக் கொண்டிருந்தார் என்று ஒரு சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவரது மௌனத்தைக் கலைக்க அவர்கள் மீண்டும் மீண்டும் முயன்றதால், "உங்களில் பாவம் இல்லாதவர் இவள் மேல் கல் எறியட்டும்." என்றார். சரியான நெத்தியடி அது!

இன்றைய நற்செய்தியிலும் சீடர்களுடைய கேள்வியில் இருந்த தவறான மதிப்பீடுகள், முரண்பாடுகள் இவற்றை நேரடியாகச் சொல்லாமல், "ஆணுக்குப் பெண் சரி நிகர் சமம்" என்று ஆணித்தரமாய் சொல்கிறார், இயேசு.

இந்த உண்மையின் ஆழத்தை மட்டும் இவ்வுலகம் மீண்டும் மீண்டும் அசை போட்டால்...

இந்த உண்மையின் ஆழத்தை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடிந்தால்...

அப்படி புரிந்து கொள்வதன் வழியே, இவ்வுண்மையை மனதார ஏற்றுக்கொள்ள முடிந்தால்...

ஆண்-பெண் உறவுகள் எவ்வளவோ நலமுடன், சக்தியுடன் வளரும். திருமண வாழ்வின் பிரச்சனைகள் தீரும். ஆணா, பெண்ணா, நீயா, நானா, யார் பெரியவர்? என்ற கேள்வியை எழுப்பாமல், இருவரும் இணை என்று உணரும்போது, வாழ்க்கைப் பிரச்சனைகள், சிறப்பாக, திருமண வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர வழியுண்டு.

யார் பெரியவர் என்று சென்ற வார நற்செய்தியில் கேள்வி எழுப்பிய சீடர்கள் மத்தியில், இயேசு ஒரு குழந்தையை வைத்தார். இந்த வார நற்செய்தியிலும், இயேசு "குழந்தைகளை என்னிடம் வர விடுங்கள். இறையாட்சி அவர்களதே" என்கிறார். குழந்தைகளிடமிருந்து பாடங்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று, கடந்த மூன்று வாரங்களாக, இயேசு தொடர்ந்து கூறி வருகிறார்.

வாழ்க்கையின் பிரச்சனைகளைச் சமாளிக்க, வளர்ந்துவிட்ட நமக்கு தெரியவில்லை என்றால், குழந்தைகளிடம் பாடங்கள் கற்றுக்கொள்ளலாமே!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.