2015-10-02 16:48:00

தமிழகப் பள்ளி ஒன்றில் பிளாஸ்டிக் பாட்டிலால் சுற்றுச்சுவர்


அக்.02,2015. தமிழ் நாட்டின் கரூர் மாவட்டத்தின் அரசு பள்ளி ஒன்றில், பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம், ஆசிரியை மற்றும் மாணவியர் சுற்றுச்சுவர் கட்டி அனைத்துலக அளவில் பாராட்டையும் பெற்றுள்ளனர்.  

கரூர் மாவட்டம், ஆச்சிமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சுற்றுச்சுவர் இன்றி, திறந்தவெளி கழிவுநீர் ஓடையால், மாணவ, மாணவியருக்கு நோய்த் தொற்று அபாயம் ஏற்பட்டது. இதைத் தடுக்க, ஓடையை மூடுவதா அல்லது பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதா என, பள்ளி நிர்வாகத்தினர் சிந்தித்ததில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு முடிவு எடுத்தனர். போதிய நிதியில்லாததால், குறைந்த செலவில் சுவர் கட்டுவது குறித்து சிந்தித்தபோது, பிளாஸ்டிக் பாட்டில்களால் சுவர் கட்ட ஆலோசனை வழங்கப்பட்டது. இப்பள்ளியின் 500 மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர், 1,800 காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்தனர். காலி பாட்டிலில், குழைவாக்கப்பட்ட மண் நிரப்பி, செங்கல் போல் அடுக்கி சுற்றுச்சுவர் எழுப்பினர்.

'டிசைன் பார் சேஞ்ச்' என்ற இந்தச் சுவர் தான், செயல்வழி கற்றல் திட்டத்தில், இந்தியாவில் முதல் பரிசையும், உலக அளவில், வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் நடைபெற்ற மாநாட்டில், முதல் ஐந்து இடங்களுக்குள் தேர்வாகி பரிசும் பெற்றுள்ளது.

பள்ளியைச் சுற்றி, 116 சதுர அடிக்கு, 1,800 காலி பாட்டில்கள், ஒரு மூட்டை மண், இரண்டு மூட்டை சிமென்ட் என, 6,000 ரூபாய் செலவில், 70 மாணவியர் பங்கேற்று, ஒரே நாளில் சுவர் கட்டப்பட்டது. 'இந்தச் சுவர், செங்கல் சுவரைவிட, 20 மடங்கு உறுதி கொண்டது' என்று  திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : தினமலர் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.