2015-10-01 16:35:00

மறைபரப்புப் பணி, வாழ்வில் வெளிப்படவேண்டும் - திருத்தந்தை


அக்.01,2015. விவிலியத்தை அறியாதவர்கள், மற்றும் மறந்துவிட்டவர்களுக்கு, தூதர்களாக, பணியாளர்களாக விளங்குவதே, மறைபரப்புப் பணியாளர்கள் என்பதன் பொருள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த துறவுசபை அங்கத்தினர்களிடம் கூறினார்.

இயேசுவின் இதயத்தின் கொம்போனி மறைபரப்புப் பணியாளர்கள் என்ற துறவுச் சபையின் உலகப் பொது அவை பிரதிநிதிகளை, இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை மறைபரப்புப் பணியாளர்கள் என்ற வார்த்தையின் நுணுக்கங்களை விளக்கிக் கூறினார்.

தன் வாழ்நாட்களில் இயேசு, தன்னைச் சுற்றியிருந்தோரிடம் உரையாற்றி, அவர்கள் உள்ளங்களை வென்றதுபோல், மறைபரப்புப் பணியாளரும், தன்னைச் சுற்றியிருப்போரின் உள்ளங்களை வெல்வதற்கு அழைக்கப் பட்டுள்ளார் என்று திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டார்.

மறைபரப்புப் பணி என்பது, பணியாளர்களின் செயல்பாடுகளில் வெளிப்படுவதைக் காட்டிலும், அவர்கள் வாழ்வின் வழி வெளிப்படவேண்டும் என்று திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.

காயப்பட்ட இயேசுவின் இதயம், இன்று காயப்பட்டிருக்கும் மனிதக் குடும்பத்தைச் சுட்டிக்காட்டும் ஓர் அடையாளம் என்று கூறியத் திருத்தந்தை, காயப்பட்டிருக்கும் மனிதர்களுக்கு நீதியும், அமைதியும் கிடைக்கப்  பாடுபடுவது, கம்போனி மறைபரப்புப் பணியாளர்களின் கடமை என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.