2015-10-01 15:45:00

கடுகு சிறுத்தாலும் – ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் ஒரு பாதைதான்


ஜென் குரு ஜோசு அவர்கள், ஜென் குரு நான்சென் அவர்களிடம், பாதை என்றால் என்ன என்று கேட்டார். ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் ஒரு பாதைதான் என்றார் நான்சென். அதைப் படிக்க முடியுமா என்று குரு ஜோசு கேட்க, நீ அதைப் படிக்க முயன்றால் அதிலிருந்து வெகு தொலைவுக்குச் சென்று விடுவாய் என்றார் நான்சென். நான்  அதைப் படிக்காவிட்டால் அது ஒரு பாதைதான் என்று எப்படி நான் அறிந்து கொள்வது என்று குரு ஜோசு கேட்க, நான் குறிப்பிட்டுச் சொல்லும் பாதை கண்களுக்குத் தெரியும் மற்றும் கண்களுக்குத் தெரியாத இந்த உலகத்தின் வெளித்தோற்றம் அல்ல. நீ உண்மையிலேயே, எவ்வித ஐயமுமின்றி, அந்தப் பேருண்மையை அடைய விரும்பினால், இந்த வானம் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு உன்னையே தயார்படுத்திக்கொள். அது நல்லது என்றோ, இது கெட்டது என்றோ பிரித்துப் பார்க்க வேண்டாம் என்றார் நான்சென்.

மனிதரின் பார்வையை மறைப்பது அவர்களின் எண்ணங்கள். உண்மைக்கு அது புதிய வர்ணத்தையும், புதிய அர்த்தத்தையும் உண்டு பண்ணுகிறது. எண்ணங்கள் செம்மையானால் வாழ்க்கைப் பாதையும் செம்மையாகும். ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் ஒரு பாதைதான் என்பதும் புரியவரும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.