2015-09-30 16:16:00

“அமைதியின் மறைப்பணி” சிறாருக்கு திருத்தந்தை செய்தி


செப்.30,2015. பிரான்ஸ் நாட்டின் லூர்து நகர் திருத்தலத்தில் “அமைதியின் மறைப்பணி” நிகழ்வில் கலந்துகொள்ளும் சிறாரோடு செபத்திலும், பிற ஆன்மீக முறையிலும் ஒன்றித்திருப்பதாக உறுதி தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நிகழ்வில் தங்களுடன் கலந்துகொள்ளுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு எட்டு வயது சிறுவன் தமியான் எழுதிய கடிதத்திற்குப் பதில் கடிதமாக, காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பிய திருத்தந்தை, இச்சிறாரின் மறைப்பணி, செபம் மற்றும் சான்று வாழ்வை உள்ளடக்கியது என்று கூறியுள்ளார்.

சிறாரே, உங்களால் செபிக்க இயலும், ஒருபோதும் மறுதலிக்காத நண்பரான இயேசுவை அன்புகூர இயலும், ஒருவர் ஒருவருக்கு உதவ இயலும், சிறந்த எதிர்காலத்தில் நம்பிக்கை வைக்க முடியும் என வயது வந்தோருக்கு உணர்த்துங்கள் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டு ஒலி-ஒளிச் செய்தியிலும் பேசியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்புள்ள தமியான் மற்றும் லூர்து திருத்தலத்திற்கு அமைதியின் மறைப்பணியாளர்களாகச் சென்றிருக்கும் சிறார் அனைவருக்கும் என்று திருத்தந்தை தொடங்கியுள்ள இக்காணொளிக் கடிதம் இப்புதன் மாலை லூர்து திருத்தலத்தில் ஒளிபரப்பப்பட்டது.

அன்னை மரியா மற்றும் அவரின் மகன் இயேசுவின் உதவியில் நம்பிக்கை வைத்து, சிறாரே, உங்களின் எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள், இன்பங்கள் மற்றும் துன்பங்களை நம்பிக்கையோடு அவ்விருவரிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்றும் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் UNITALSI என்ற நிறுவனம் இந்நிகழ்வை நடத்துகிறது. இந்நிறுவனம் நோயாளிகள், மனநலம் குன்றியவர்கள், சிறார் என பலதரப்பட்ட மக்களை திருத்தலங்களுக்கு அழைத்துச் செல்கின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.