2015-09-30 16:54:00

மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க பங்களாதேஷ் அரசுக்கு அழைப்பு


செப்.30,2015. பங்களாதேஷில் இத்தாலியப் பிறரன்புப் பணியாளர் கொலை செய்யப்பட்டுள்ளது குறித்த தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ள அதேவேளை, பங்களாதேஷ் அரசு குடிமக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டுமெனக் கேட்டுள்ளது தலத்திருஅவை.

பங்களாதேஷில் டச்சு அரசு-சாரா பிறரன்பு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த இத்தாலியப் பணியாளர் Cesare Tavella அவர்கள், ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலை குறித்து ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த டாக்கா துணை ஆயர் Theotonius Gomes அவர்கள், பங்களாதேஷ் அரசு அதிகாரிகளும், பல சமூகத் தலைவர்களும்கூட, இக்கொலைக்கு எதிரானத் தங்களின் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் என்று கூறினார்.

பங்களாதேஷில் ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் பிரசன்னம் குறித்து பொதுவாகவே அச்சம் நிலவுவதாகவும், இது ஓர் உலகளாவிய விவகாரம், பங்களாதேஷில் வாழும் புரட்சியாளர்கள், ஐ.எஸ். அரசின் ஆதரவைப் பெற்றிருக்கக் கூடும் என்றும் உரைத்த ஆயர் Gomes அவர்கள், இத்தாலியப் பணியாளர் கொலை செய்யப்பட்டிருப்பது தங்களுக்கு அதிர்ச்சியையும் கவலையையும் கொடுத்துள்ளது என்றும் கூறினார்.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.