2015-09-30 16:27:00

புனித ரீத்தா, இறைஇரக்கத்தின் வல்லமையின் அடையாளம்


செப்.30,2015. பிரமாண்டமான புனித ரீத்தாவின் திருவுருவத்தைப் பார்க்கும்போது, இறைஇரக்கத்தின் வல்லமையின் அடையாளமாகவும், அப்புனிதரின் அசாதாரண மனித மற்றும் ஆன்மீக அனுபவத்தை மீண்டும் வாசிப்பதாகவும் அது உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த Cascia நகர் புனித ரீத்தாவின் திருவுருவத்தை இப்புதன் பொது மறையுரைக்குப் பின்னர் ஆசிர்வதித்த திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

சுண்ணாம்புக் கல்லால் ஆறு மீட்டர் உயரம் மற்றும் முப்பது டன் எடை கொண்ட இத்திருவுருவம் இவ்வியாழன் வரை வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும். பின்னர், Casciaவும், இப்புனிதரின் பிறப்பிடமான Roccaporena நகரும் சந்திக்கும் இடத்தில் அக்டோபர் 18ம் தேதி வைக்கப்படும்.

லெபனான் நாட்டுச் சிற்பி Nayef Alwan அவர்களால் இத்திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தாலியக் கைம்பெண்ணான புனித ரீத்தா, அகுஸ்தீன் துறவு சபையைச் சார்ந்தவர். 1381ம் ஆண்டில் பிறந்து 1457ம் ஆண்டு மே 22ம் தேதி இறந்தார். 1900மாம் ஆண்டில் மே 24ம் தேதி திருத்தந்தை 13ம் லியோ அவர்கள் ரீத்தாவை புனிதராக அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.