2015-09-30 16:35:00

திருத்தந்தை குணப்படுத்துபவர், வழிகாட்டி, பேராயர் ஷாபுட்


செப்.30,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது, தெருவில் வாழும் சாதாரண மனிதர் முதல் தொலைக்காட்சி ஊடகத்துறையினர் வரை, கத்தோலிக்கர் முதல் கத்தோலிக்கர் அல்லாதவர் வரை அனைத்து மக்களிலும் காணப்பட்ட ஆர்வம் தன்னை மிகவும் கவர்ந்ததென்று அமெரிக்க தலத்திருஅவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் குறித்து CNA ஊடகத்திற்கு ஒரு நீண்ட பேட்டியளித்த ஃபிலடெல்ஃபியா பேராயர் சார்லஸ் ஷாபுட் அவர்கள் இவ்வாறு கூறினார்.

திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட வாரம், ஒரு வியத்தகு மாயவித்தை வாரமாக இருந்தது, இப்பயணத்தில் நல்லுணர்வு, மகிழ்வு மற்றும் நம்பிக்கை  அனுபவத்திற்காக ஃபிலடெல்ஃபியா மக்கள் தாகமாய் இருந்தார்கள், அது அவர்களுக்குக் கிடைத்துவிட்டது என்றும் கூறினார் பேராயர் ஷாபுட்.

கடும் பாதுகாப்பு இல்லாமல் இருந்திருந்தால், ஃபிலடெல்ஃபியாவில் இடம்பெற்ற  திருத்தந்தையின் நிறைவுத் திருப்பலியில், தற்போது கலந்துகொண்ட 9 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களைவிட இன்னும் அதிகம் பேர் கலந்துகொண்டிருப்பார்கள் என்று மேலும் கூறினார் பேராயர் ஷாபுட்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமெரிக்கர்களின் விசுவாசம் மற்றும் வாழ்வின் எதார்த்தத்தைக் கண்டார், வாஷிங்டனில் அமெரிக்காவின் அரசியல் மையத்தை அனுபவித்தார், நியுயார்க்கில், மாபெரும் நிதி மற்றும் பன்னாட்டு நகரத்தைச் சந்தித்தார் என்றார் பேராயர் ஷாபுட்.

ஃபிலடெல்ஃபியாவில், சாதாரண அமெரிக்கர்களால் கட்டப்பட்டு, காக்கப்பட்டுவரும் பெரிய நகரத்தைப் பார்த்தார், இங்கே ஒவ்வொரு நாளும் தினமும் இலட்சக்கணக்கான மக்கள் திருத்தந்தை மீது அன்புகொண்டு ஆர்வத்துடன் உழைப்பதையும் பார்த்தார் என்றுரைத்த பேராயர் ஷாபுட் அவர்கள், திருத்தந்தை, குணப்படுத்துபவர் மற்றும் வழிகாட்டி என்றும் கூறினார்.

செப்டம்பர் 19 முதல் 27 வரை, கியூபா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்கான பத்து நாள்கள் கொண்ட 10வது வெளிநாட்டுத் திருத்தூதுப்  பயணத்தை மேற்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.