2015-09-30 16:42:00

திருஅவை மற்றும் சமூகத் தொடர்பு குறித்த டிஜிட்டல் நூலகம்


செப்.30,2015. முதல் நூற்றாண்டிலிருந்து 21ம் நூற்றாண்டு வரையுள்ள திருத்தந்தையரின் சமூகத் தொடர்பு குறித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏடுகளை வாசிக்க உதவும் ஒரு புதிய இணையதள டிஜிட்டல் நூலகம் இப்புதனன்று வத்திக்கானில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Baragli திட்டம் எனப்படும் இப்புதிய டிஜிட்டல் நூலகத்தை இப்புதனன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவித்து ஆரம்பித்து வைத்துள்ளது வத்திக்கான். பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட, சமூகத் தொடர்பு குறித்த திருத்தந்தையரின் போதனைகள் இதில் உள்ளன. குறிப்பாக, கத்தோலிக்கக் கல்வி மற்றும் பயிற்சி மையங்களில் பணியாற்றுவோருக்கு உதவும் நோக்கத்தில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல நூற்றாண்டுகளாக, கத்தோலிக்கத் திருஅவை தனது செய்தியை வழங்கி வந்த முறையை ஆய்வு செய்ததில் முன்னணியில் இருந்து, 2001ம் ஆண்டு இறந்த இயேசு சபை அருள்பணியாளர் Enrico Baragli அவர்கள் பெயரால் இத்திட்டம் அழைக்கப்படுகிறது.

திருப்பீட சமூகத் தொடர்பு அவை, உரோம் சலேசிய பாப்பிறை பல்கலைக்கழகத்தின் சமூகத் தொடர்புத் துறை, வத்திக்கான் நூல் வெளியீட்டு நிறுவனம், வத்திக்கான்.வா இணையதளம் ஆகியவை இணைந்து இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளன.  

இந்த டிஜிட்டல் நூலகம், இணையதளத்தில் ஒருவர் தனியாக வாசித்து ஆய்வு செய்யவும், அதனைப் பயன்படுத்தும் பிறரோடு ஒத்துழைக்கவும் உதவும் என்று நிருபர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.