2015-09-29 15:55:00

வெப்பநிலை மாற்றத்தைத் தடைசெய்வதில் கத்தோலிக்கரின் பங்கு


செப்.29,2015. உலகை அதிகம் பாதித்துவரும் வெப்பநிலை மாற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளில் கத்தோலிக்க நிறுவனங்கள் நன்னெறிக் கோட்பாட்டின் அடிப்படையில் முன்னின்று செயல்படுமாறு கேட்டுக்கொண்டார் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் Massachusetts மாநிலத்திலுள்ள கத்தோலிக்கப் பல்கலைக்கழகமான பாஸ்டன் கல்லூரியில் இடம்பெற்றுவரும் வெப்பநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கில் உரையாற்றிய, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

"நம் பொதுவான இல்லம் : வெப்பநிலை மாற்றத்தைக் குறைப்பதில் நன்னெறிக் கடமை" என்ற தலைப்பில் இத்திங்களன்று தொடங்கிய மூன்று நாள் கருத்தரங்கில், “நிலையான மனித சமுதாயமும் உறுதியான பூமிக்கோளமும்” என்ற தலைப்பில் உரையாற்றிய கர்தினால் டர்க்சன் அவர்கள், வெப்பநிலை மாற்றத்தைக் குறைப்பதில் கத்தோலிக்க நிறுவனங்களின் அறநெறிக் கடமைகளைச் சுட்டிக்காட்டினார்.  

இறைவனின் படைப்பையும், நம் பொதுவான இல்லமாகிய இந்தப் பூமியையும் பாதுகாப்பதில், மனித சமுதாயத்திற்கு இருக்கவேண்டிய பொறுப்புணர்வு, பரிவன்பு மற்றும் தோழமையுணர்வை கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் எடுத்துரைக்குமாறும் கேட்டுக்கொண்டார் கர்தினால் டர்க்சன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.