2015-09-29 15:38:00

திருத்தந்தை:சுவர்கள் ஒருநாளும் தீர்வாகாது, மாறாக பாலங்களே..


செப்.29,2015. பிரச்சனைகளுக்கு சுவர்கள் ஒருநாளும் தீர்வாகாது, மாறாக பாலங்களே அவற்றுக்கான தீர்வு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று கூறினார்.

கியூபா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்கான பத்து நாள்கள் கொண்ட தனது 10வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து உரோம் நகருக்குத் திரும்பிய பயணத்தில் தன்னோடு பயணம் செய்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

திருத்தந்தை நிறைவு செய்த இத்திருத்தூதுப் பயணம், அருள்பணியாளரின் பாலியல் முறைகேடுகளால் திருஅவைக்கு ஏற்பட்ட துர்மாதிரிகை, மனச்சான்றுக்கு எதிரானவற்றை எதிர்ப்பதற்கு இருக்கும் உரிமை, கொலம்பியாவில் அமைதி, குடியேற்றதாரர், வத்திக்கானில் விரைவில் தொடங்கவிருக்கும் குடும்பம் குறித்த ஆயர்கள் மாமன்றம், சீனாவுடன் திருப்பீட உறவு உட்பட பல்வேறு மொழிகளில் 11 பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு 47 நிமிடங்கள் பதிலளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் தனக்கு இனிய மற்றும் மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது என்றும், தான் அமெரிக்காவுக்குச் சென்றது இதுவே முதல் முறை என்றும், மக்களுக்கு மிக நெருக்கமாக இருந்து, அவர்களின் இன்ப துன்ப நேரங்களில் அவர்களுடன் நடந்து செல்வது அமெரிக்கத் திருஅவைக்கு பெரிய சவாலாக உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை.

பாலியல் முறைகேடு எல்லா இடங்களிலும் நடந்தாலும், அருள்பணியாளர்கள் அவ்வாறு நடக்கும்போது அவர்கள் தங்களின் இறையழைப்பை மறுதலிக்கின்றனர் என்றும், கத்தோலிக்க திருமண முறிவு என்று எதுவும் கிடையாது, தம்பதியர் தங்கள் வாழ்வு முழுவதும் திருமண வாழ்வில் நிலைத்திருப்பதற்கு அவர்களைத் தயாரிக்க வேண்டிய பொறுப்பு திருஅவைக்கு உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐரோப்பாவில் குடியேற்றதாரர் பெருமளவில் நுழைவதைத் தடுப்பதற்கு எல்லைகளில் அமைக்கப்படும் தடைக் கம்பி வேலிகள் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, எல்லாச் சுவர்களும் விரைவில் அல்லது பின்னர் தகர்ந்துவிடும், உரையாடல் மூலம் தீர்வுகள் எட்டப்பட வேண்டும், சுவர்கள் ஒருநாளும் தீர்வாகாது என்றும் கூறினார் திருத்தந்தை.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், ஒரு “விண்மீனாக, ஹீரோவாகப்”(star) போற்றப்படுவது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைந்துபோகும் மற்றும் கீழே விழும் எத்தனையோ விண்மீன்களை நாம் பார்த்திருக்கிறோம், ஆனால் இறைவனின் பணியாளராய் இருப்பது ஒருபோதும் அழியாது, நான் இறைவனின் பணியாளர்களின் பணியாள் என்று கூறினார்.

நான் சீன மக்களை அன்புகூர்கிறேன், அந்நாட்டுடன் நல்லுறவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கும் என நம்புகிறேன், சீனா போன்ற பெரிய நாட்டை நண்பனாகக் கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும், பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.