2015-09-29 11:33:00

கடுகு சிறுத்தாலும்... பல கோடி மீன்களா? ஒரே ஒரு மீனா?


உலகின் துன்பங்களை, அநீதிகளை எவ்விதம் நீக்குவது என்ற ஆழ்ந்த சிந்தனையுடன் ஒருவர் கடற்கரையில் நடந்துகொண்டிருந்தார். அப்போது, அவருக்கு முன் ஒரு சிறுவன், கடற்கரையில் ஒதுங்கியிருந்த 'நட்சத்திர மீன்களை' (star fish) ஒவ்வொன்றாக எடுத்து கடலில் எறிந்துகொண்டிருந்தான். நம் சிந்தனையாளர், அச்சிறுவனை அணுகி, "என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். அதற்கு, அச்சிறுவன், "இந்த மீன்கள் கரையிலேயே கிடந்தால், இறந்துவிடும். எனவே, இவற்றை நான் மீண்டும் கடலுக்குள் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்" என்று பதில் சொன்னான். அதற்கு பெரியவர், "இந்தக் கடற்கரையில் பல்லாயிரம் மீன்கள் ஒதுங்கியிருக்கின்றன. அதேபோல், உலகெங்கும் உள்ள கடற்கரைகளில் பல கோடி மீன்கள் ஒதுங்கியிருக்கக் கூடும். அவற்றையெல்லாம் உன்னால் காப்பாற்ற முடியுமா?" என்று கேட்டார்.

அச்சிறுவன் அவரை ஒருமுறை ஆழமாகப் பார்த்துவிட்டு, பின்னர். "உலகின் கடற்கரைகளில் ஒதுங்கியிருக்கும் அனைத்து மீன்களையும் என்னால் காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், இதோ, இந்த ஒரு மீனை என்னால் காப்பாற்ற முடியுமே!" என்று சொல்லியபடி, குனிந்து ஒரு நட்சத்திர மீனைக் கையில் எடுத்து, கடலுக்குள் எறிந்தான் சிறுவன்.

“இனியொரு விதி செய்வோம், அதை எந்நாளும் காப்போம்; தனியொருவனுக்கு உணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று புரட்சிக்கவி பாரதி பறைசாற்றினார்.

"தனியொருவனுக்கு உணவளிப்பது தனக்கே அளித்த உணவு" என்பதை இயேசு சொல்லித் தந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.