2015-09-28 15:27:00

கடுகு சிறுத்தாலும் : உள்அழகு தெரியாமல் புறஅழகை......


ஒரு நாள் ஒரு பெரிய மனிதரைத் தேடி இரண்டு ஓவியர்கள் சென்றார்கள். அவ்விருவரில் யார் சிறந்த ஓவியர் என்று புரிந்து கொள்ள முயன்றார் பெரியவர். இரு ஓவியர்களுமே சிறந்த கலைஞர்களாக அவருக்குத் தெரிந்தார்கள். அதனால் அவர் அந்த இருவரிடமும், எனது இரு வீடுகளை அழகுபடுத்துங்கள், அதற்குத் தேவையான வண்ணங்களையும் தூரிகைகளையும் தருகிறேன். ஒரு மாத காலம் அவகாசமும் தருகிறேன், சரியாக முப்பது நாள்கள் கழித்து வந்து இரு வீடுகளையும் பார்ப்பேன், எந்த வீடு என்னைக் கவர்கிறதோ அதை அழகுபடுத்தியவரை சிறந்த கலைஞராகத் தேர்ந்தெடுத்து பரிசு தருகிறேன் என்றார். ஓவியர்களில் ஒருவர் வண்ணங்களை வாரித் தெளித்து சுவர்களையெல்லாம் அழகுபடுத்தினார். வீடு வண்ணமயமாக காட்சியளித்தது. அடுத்த ஓவியர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வீட்டிற்கு வண்ணங்களோடு சென்றார். வீட்டைச் சுற்றிப் பார்த்தார்.  சுவர்களும், தரையும் அழுக்காய் இருந்தன. வண்ணங்களை வாரி இறைக்கு முன்னர் முதலில் தண்ணீரை வாரி இறைத்து சுவர்களையும், தரையையும் தேய்த்துக் கழுவினார். அப்போதுதான் தெரிந்தது அது பளிங்கினால் கட்டப்பட்ட வீடு என்று. அதுவே அழகாக இருந்தது. ஆதலால் அவ்வீட்டை அப்படியே விட்டுவிட்டார். முப்பது நாள்கள் கழித்து அவ்விரு வீடுகளின் உரிமையாளர் வந்து பார்த்தார். புதிதாக வர்ணம் தீட்டப்படாமல் கழுவி சுத்தம் செய்யப்பட்ட வீடே அவருக்கு அழகாகத் தோன்றியது. அந்த ஓவியரையே சிறந்த கலைஞராகவும் அவர் தேர்ந்தெடுத்தார். உள் அழகு தெரியாமல் புற அழகை மேம்படுத்துவதால் பயன் என்ன?

நம்மைச் சுற்றியிருக்கிற வேண்டாத விடயங்களைப் புரிந்துகொண்டாலே நாம் யார் என்பது நமக்குப் புரிந்துவிடும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.