2015-09-27 13:57:00

சுதந்திர தேசிய வரலாற்றுப் பூங்காவில் குடியேற்றதாரர் சந்திப்பு


செப். 27,2015. இச்சனிக்கிழமை மாலை 3.45 மணிக்கு பிலடெல்ஃபியா மாநகரின் சுதந்திர தேசிய வரலாற்றுப் பூங்காவுக்கு இரண்டு கிலோ மீட்டர் தூரம் சாதாரண ஃபியட் காரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தையைப் பார்ப்பதற்காக இவர் பயணம் செய்த சாலையெங்கும் மக்கள் திரண்டிருந்தனர். சுதந்திர தேசிய பூங்காவை திருத்தந்தை அடைந்தவுடன் திறந்த வாகனத்திற்கு மாறினார். அங்கு ஏறக்குறைய நாற்பதாயிரம் இஸ்பானிய மற்றும் பிற குடியேற்றதாரர் கூடியிருந்தனர். காலையிலிருந்தே இப்பூங்காவில் காத்திருந்த இம்மக்கள் மத்தியில் திருத்தந்தை, வெண்மை நிறத் திறந்த காரில் வலம் வந்தபோது மக்கள் வெள்ளம் திருத்தந்தை, திருத்தந்தை என உரக்கச் சொல்லியது. திருத்தந்தையின் வாகனத்திற்குப் பாதுகாப்பாகச் சென்றவர்கள், கூட்டத்தினரிடமிருந்து குழந்தைகளை வாங்கி திருத்தந்தையிடம் கொடுத்துக் கொண்டே இருந்தனர். திருத்தந்தையின் வெள்ளைத் தொப்பி போன்று அணிந்திருந்த ஒரு குழந்தை, குதிரைப்பாகனின் சட்டை போன்று அணிந்திருந்த ஒரு குழந்தை என பல வண்ணங்களில் மின்னிய குழந்தைகளை திருத்தந்தை முத்தமிட்டு மக்களின் கைகளைத் தொட்டு அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தி மேடைக்குச் சென்றார். மெக்சிகோவிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு வந்திருந்த ஏழு பேர் கொண்ட ஒரு குடும்பம் ஐந்து அடி நீளமுள்ள ஒரு சிலுவையைத் திருத்தந்தையிடம் கொடுத்தது. அதை ஆசிர்வதித்தார் திருத்தந்தை. அமெரிக்க ஐக்கிய நாட்டின் உள்நாட்டுப் போரின்போது, 1863ம் ஆண்டு நவம்பர் 19ம் நாள், முன்னாள் அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் அவர்கள் Gettysburgல் உரையாற்றுவதற்குப் பயன்படுத்திய lecternஐயே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இவ்விடத்தில் பயன்படுத்தினார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசியல் அமைப்பும், விடுதலையின் அறிவிப்பும் கையெழுத்திடப்பட்ட இவ்விடத்தில், சமய சுதந்திரம் மற்றும் குடியேற்றம் பற்றி உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். ஃபிலடெல்பியாவிலுள்ள சுதந்திர தேசிய வரலாற்றுப் பூங்காவில், தேசிய அரசியல் அமைப்பு மையமும், சுதந்திர மணி மையமும் உள்ளன. கெட்டிஸ்பெர்க் தேசிய கல்லறைத் தோட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் அவர்கள் Gettysburgல் ஆற்றிய உரை, அமெரிக்க வரலாற்றில் மிகவும் புகழ்பெற்றதாகும். தற்போது அமெரிக்காவும், ஒவ்வோர் அமெரிக்கரும் அனுபவிக்கும் பல ஆசிர்வாதங்கள் மற்றும் சுதந்திரங்களுக்கு நன்றி தெரிவித்து அதைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள், சமய சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கெதிரான போராட்டங்களில் அனைத்து அமெரிக்கர்களும், அனைத்து மதங்களும் ஒன்றிணைந்து முயற்சிக்க வேண்டும். சமய சுதந்திரம் இறைவனின் ஒரு கொடை. அதைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனைவரையும் ஆசிர்வதித்து புனித சார்லஸ் பொரோமேயோ குருத்துவக் கல்லூரி சென்றார். பின்னர் இரவு 7.30 மணிக்கு, பிலடெல்ஃபியாவின் பெஞ்சமின் பிராங்க்ளின் பூங்காவில் உலகக் குடும்பங்களின் விழாவில் கலந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.