2015-09-27 13:21:00

குடும்பம் நம்பிக்கையின் தொழிற்சாலை, திருத்தந்தை பிரான்சிஸ்


செப்.27,2015. ஃபிலடெல்பியா 8வது உலக குடும்பங்கள் மாநாட்டுத் திருவிழிப்பில் தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். குடும்பம் இறைவனின் பெரிய கொடை மற்றும் இது இறைவனின் படைப்பில் மிகவும் அழகானது என்று விவிலியம் கூறுகிறது. குடும்பம், இறைவனின் அழகு, உண்மை மற்றும் நன்மைத்தனத்தின் வாய்க்காலாகவும், அவற்றைப் பிரதிபலிப்பதாகவும் உள்ளது. ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நிலவும் திருமண அன்பில் ஊன்றப்பட்ட குடும்பமே, கடவுளின் சொந்தத் திட்டத்தின்படி வாழ்வைத் தோற்றுவித்து பேணுகிறது. இது நம்பிக்கையின் தொழிற்சாலை போன்றது. தவறுகளே இல்லாத நிறைவான குடும்பங்கள் இல்லையெனினும், எல்லாக் குடும்பங்களிலும் நெருக்கடிகளும், இன்னல்களும், மோதல்களும், சவால்களும் துன்பங்களும் உள்ளன. சில நேரங்களில் குடும்பங்களில் சண்டைகளின்போது உணவுத் தட்டுகள் பறக்கின்றன, பிள்ளைகள் தலைவலியாய் இருக்கின்றனர். மாமியாரோடு பேச மாட்டேன் என்று சொல்லப்படும். ஆயினும் இத்துன்பங்கள் அன்பால் எதிர்கொள்ளப்படுகின்றன. குடும்பங்களில் எப்போதும் ஒளி இருக்கின்றது. ஏனென்றால் இறைவனின் அன்பு அங்கு உள்ளது. அன்பு கொண்டாட்டத்தைப் பற்றியது. அன்பே மகிழ்ச்சி. அன்பு நம்மை முன்னோக்கிச் செல்ல வைக்கின்றது. அன்பால் அனைத்தையும் மேற்கொள்ள முடியும். பல தலைமுறைகள் குடும்பங்களில் உள்ளன. சிறார், இளையோர் மற்றும் வயதானவர்களே நம் எதிர்காலம். இந்த வலிமையே நம்மை முன்னோக்கிச் செல்ல வைக்கின்றது. தாத்தா பாட்டிகள் குடும்பத்தின் வாழும் நினைவுகள். இவர்கள் விசுவாசத்தை நமக்கு வழங்கியவர்கள். எனவே வயதானவர்களையும் சிறாரையும் பராமரியுங்கள். உங்களை இறைவன் ஆசிர்வதிப்பாராக, உங்களுக்கு இறைவன் நம்பிக்கையைக் கொடுப்பாராக என்று குடும்பங்களை வாழ்த்தி அவர்களுக்குத் தனது ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.