2015-09-27 11:14:00

ஃபிலடெல்ஃபியா பசிலிக்காவில் திருத்தந்தை வழங்கிய மறையுரை


ஃபிலடெல்ஃபியா பசிலிக்காவில் திருத்தந்தை வழங்கிய மறையுரை

 

செப்.27,2015. அன்பு சகோதர, சகோதரிகளே, இந்நகரிலும், இந்த மாநிலத்திலும் கட்டப்பட்ட திருஅவை, சுவர்களை எழுப்பியதால் கட்டப்படவில்லை, மாறாக, சுவர்களைத் தகர்த்ததால் கட்டப்பட்டது. இப்பகுதியைச் சேர்ந்த பல தலைமுறையினர், சமுதாயத்தின் விளிம்புகளுக்குச் சென்று பணியாற்றினர்.

அருள் பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகியோர், அர்ப்பண உணர்வுடன் உழைத்ததால், விண்ணை நோக்கி எழும்பியுள்ள பல கோவில்கள், இந்நகரில் உருவாயின. கல்விப்பணியிலும் இவர்கள் எடுத்த முயற்சிகள் போற்றுதற்குரியவை. இந்த உன்னத பாரம்பரியத்தை நீங்கள் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இந்தத் தலத்திருஅவையால் உருவாக்கப்பட்ட புனித கேத்தரின் ட்ரெக்ஸல் (Saint Katharine Drexel) பற்றி உங்களில் பலருக்குத் தெரியும். இப்பகுதியில் தேவைப்பட்ட மறைபரப்புப் பணிகளைக் குறித்து அவர், திருத்தந்தை 13ம் லியோ அவர்களிடம் பேசியபோது, ஞானம் நிறைந்த அந்தத் திருத்தந்தை, கேத்தரினிடம், "நீ இதைப்பற்றி என்ன செய்யப்போகிறாய்?" என்று கேட்டார். திருத்தந்தை கேட்ட அந்தக் கேள்வி, கேத்தரின் வாழ்வை மாற்றியது. திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் இறைவனின் உடலான திருஅவையைக் கட்டியெழுப்ப பணிக்கப்பட்டவர்கள் என்பதை கேத்தரின் உணர்ந்தார்.

நற்செய்தியின் மகிழ்வை பகிர்ந்துகொள்ளுதல், திருஅவையைக் கட்டியெழுப்புதல் என்ற பின்னணியை மனதில் கொண்டு, "நீ இதைப்பற்றி என்ன செய்யப்போகிறாய்?" என்ற கேள்வியை, இரு கோணங்களில் சிந்திக்கலாம்.

முதலாவதாக, இந்தக் கேள்வி, ஓர் இளம் பெண்ணிடம் கேட்கப்பட்டது. பல உயர்ந்த இலட்சியங்கள் கொண்டிருந்த அந்த இளம்பெண்ணின் வாழ்வை, இந்தக் கேள்வி மாற்றியது. நம் மத்தியில் எத்தனையோ இளையோர், உயர்ந்த இலட்சியங்களுடன், தாராள மனதுடன், கிறிஸ்துவின் மீதும், திருஅவையின் மீதும் அன்பு கொண்டு வாழ்கின்றனர். அவர்களுக்கு இத்தகைய சவால்களை நாம் விடுக்கிறோமா? அவர்கள் தங்கள் இலட்சியங்களை நிறைவேற்ற நாம் வழி அமைத்துக் கொடுக்கிறோமா? அவர்கள் ஆர்வத்தில் நாமும் பங்கேற்கிறோமா? திருஅவையின் பணியில் அனைவருக்கும் பொறுப்புண்டு என்பதை இந்தத் தலைமுறையினர் உள்ளங்களில் வளர்ப்பது, இன்று நாம் சந்திக்கும் பெரும் சவால்களில் ஒன்று.

"நீ இதைப்பற்றி என்ன செய்யப்போகிறாய்?" என்ற கேள்வியை வயதான ஒரு திருத்தந்தை, பொதுநிலையினரான ஒரு பெண்ணிடம் விடுத்தார். அமெரிக்க ஐக்கிய நாட்டில் திருஅவை எப்போதும் கல்விக்கும், மறைகல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இந்த உறுதியான அடித்தளத்தின் மீது இன்னும்  கூடுதலாக இந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்புவது நம் கடமை. அருள்பணியாளர்கள், துறவியர் என்ற முறையில், நாம் தனி பொறுப்புக்கள் பெற்றிருந்தாலும், பொதுநிலையினரோடு இணைந்து, நம் பணிகளை இன்னும் உறுதிப்படுத்த வேண்டும்.

குடும்பங்களின் உலக மாநாடு நிகழும் இந்நாட்களில், குடும்பங்களுக்கு, குறிப்பாக, திருமணத்திற்கு தங்களையே தயாரித்துவரும் இளையோருக்கு, நாம் ஆற்றவேண்டிய பணிகளைப்பற்றி, சிறப்பாகச் சிந்திக்க உங்களை அழைக்கிறேன். அதேவேளையில், குடும்பங்களை மையப்படுத்தி, நடைபெறவிருக்கும் ஆயர்களின் பொது மாமன்றத்திற்காக செபிக்கவும் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.