2015-09-27 13:26:00

8வது உலக குடும்பங்கள் மாநாட்டு விழா


செப்.27,2015. 8வது உலக குடும்பங்கள் மாநாட்டின் இந்த இரவு நிகழ்வு, திருவிழிப்பு வழிபாடாகவும் விழாவாகவும் நடைபெற்றது. இது, பாடல்கள், செபங்கள், குடும்பங்களின் சாட்சியங்கள் உட்பட பலவற்றைக் கொண்டிருந்தது. இந்நிகழ்வை நடிகர் Mark Wahlberg முன்னின்று நடத்த, பாப் பாடகர்கள் Aretha Franklin, Andrea Bocelli, Folk பாடகர் Marie Miller, கொலம்பிய பாப் பாடகர் Juanes, அமெரிக்க ராக் இசைக் குழு The Fray என சில முக்கிய கலைஞர்கள் இதில் கலந்து கொண்டு பாடினர். இதில் பகிர்ந்துகொண்ட நடிகர் Mark Wahlberg அவர்கள், ஒரு நல்ல தந்தையாகவும், ஒரு நல்ல கணவராகவும், இன்னும் மிக முக்கியமாக, ஒரு நல்ல மனிதராகவும் தான் வாழ்வதற்கு கத்தோலிக்க விசுவாசமே தனக்கு உதவியது என்று கூட்டத்தினரிடம் சாட்சியம் சொன்னார். Wahlberg, இளைஞராக இருந்தபோது போதைப்பொருளுக்கு அடிமையாகி ஒரு பங்குக்குருவின் வழிகாட்டுதலால் திருந்தி புது வாழ்வு வாழ்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கொண்டாட்ட நிகழ்வில், முதலில் பேராயர் சார்லஸ் ஷாபுட் அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின்னர் நைஜீரியா, ஆஸ்திரேலியா, ஜோர்டன், ஆர்ஜென்டீனா, உக்ரேய்ன், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய ஆறு நாடுகளின் பல்வேறு வயதுடைய ஆறு குடும்பங்கள், குடும்ப வாழ்வு பற்றித் திருத்தந்தையிடம் சாட்சியங்கள் கூறின. ஜோர்டன் நாட்டின் கிறிஸ்தவத் தம்பதியர் Nidal Mousa மற்றும் Nida Joseph, தங்களின் Faten, Dema ஆகிய இரு மகள்களுடன் சென்று சாட்சியம் கூறினர். கடும் வறுமை, சமய அடக்குமுறை, குடியேற்றம், போர் ஆகியவற்றால் துன்புறும் மக்களுக்குத் தாங்கள் உதவி வருவது குறித்துப் பகிர்ந்து கொண்டனர். திருமண வாழ்வில் அறுபது ஆண்டைக் கடந்துள்ள ஆர்ஜென்டீனா நாட்டு மாரியோ, ரோசா தம்பதியர், குடும்பங்கள் இறைபராமரிப்பில் நம்பிக்கை வைக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறினர். இவர்கள் தங்களின் பேரக்குழந்தைகளுடன் சென்று சாட்சி கூறினர்.

ஒவ்வொரு குடும்பமும் சாட்சி சொன்ன பின்னர் திருத்தந்தை அவர்களுடன் பேசி அவர்களை ஆசிர்வதித்தார். இக்குடும்பங்களின் சாட்சியங்களைக் கேட்ட திருத்தந்தை, அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இந்நிகழ்வில் உரையாற்றுவதற்குத் தயாரித்து வைத்திருந்த உரையை வழங்காமல் அந்நேரத்தில் தனது இதயத்தின் ஆழத்தில் உதித்த சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை. குடும்பங்களின் முக்கியத்துவம் பற்றி நீண்ட நேரம் பேசி, சிறார் மற்றும் வயதானவர்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தினார். இறுதியில் குடும்பங்களுக்குத் தனது ஆசிர் அளித்து இக்கொண்டாட்ட நிகழ்வை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் இச்சனிக்கிழமை பயண நிகழ்வுகள் நிறைவடைந்தன.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.