2015-09-26 15:46:00

நியுயார்க் இரட்டைக் கோபுர நினைவிடத்தில் திருத்தந்தை செபம்


செப்.26,2015. நியுயார்க்கில் திருத்தந்தை சென்றவிடமெல்லாம் மக்கள் பெருந்திரளாக நின்று பாப்பிறைக் கொடிகளுடன் கைகளை ஆட்டி அவரை வாழ்த்தினர். மக்கள் திருத்தந்தையாகிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், சாதித்துக் காட்டுவோம் என்பதுபோல் இடையிடையே கட்டைவிரலை உயர்த்திக் காட்டி மக்களை உற்சாகப்படுத்தினார். 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பயங்கரவாதத்தால் தரைமட்டமாக்கப்பட்ட நியுயார்க் உலக வர்த்தக மையம் இருந்த இடத்திலுள்ள நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தார். அத்தாக்குதலின்பின் அங்கு கிடந்த சிலுவை வடிவ ஓர் இரும்புக் கல், ஒரு விவிலியம் இந்த நினைவு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதில் பலியானவர்களின் இருபது குடும்பத்தினரையும் தனித்தனியே கைகுலுக்கி ஆறுதல் அளித்தார் திருத்தந்தை. அவ்விடத்தில் கூடியிருந்த 12 பல்சமயத் தலைவர்களுள், நியுயார்க் கர்தினால் திமோத்தி டோலன்,  நியுயார்க் யூதமத ரபி Elliot Cosgrove, நியுயார்க் நகர் இஸ்லாமிய குரு Khalid Latif ஆகிய இருவரும் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினர். இறைவனின் பெயரால் தவறான கொடுந்தீமை இழைக்கப்பட்ட இந்த இடத்தில் பலியானவர்களுக்காகச் செபிப்போம். புனித பிரான்சிஸ் கூறியது போன்று, வெறுப்புள்ள இடத்தில் அன்பையும், காயமடைந்த இடத்தில் மன்னிப்பையும், இருளான இடத்தில் ஒளியையும் ஏற்றுவோம் என்றார் ரபி Elliot Cosgrove. இஸ்லாமிய குரு Khalid Latif அவர்கள், இந்த இடத்தைத் தாக்கியவர்கள் சகிப்பற்றதன்மை மற்றும் அறியாமையால் பற்றி எரிந்தவர்கள். இறைவனுக்கு எல்லா வாழ்வும் புனிதமானது, விலைமதிப்பற்றது. இந்த உணர்வில் பிறர் தவறும்போது நாம் அவர்களுக்கு அமைதியான முறையில் அதை நினைவுபடுத்துவோம் என்று பேசினார். பின்னர் திருத்தந்தை அமைதிக்காகச் செபித்தார். இந்து, புத்தம், சீக், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களிலிருந்து அமைதி குறித்த தியானச் சிந்தனைகள் வாசிக்கப்பட்டன. இந்துமதப் பிரதிநிதியின் தியானச் சிந்தனை இதோ. இத்தாக்குதலில் இறந்தவர்களுக்காக எபிரேயத்தில் செபம் சொல்லப்பட்டது. பின்னர் திருத்தந்தையும் உரையாற்றினார். பின்னர் கர்தினால் டோலன் அவர்களுடன் நினைவு அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்த்தார் திருத்தந்தை. பின்னர் தான் தங்கியிருந்த இல்லம் சென்று மதிய உணவருந்தி ஓய்வெடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.