2015-09-26 15:30:00

நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்


செப்.26,2015. அன்பு நெஞ்சங்களே, அமெரிக்க ஐக்கிய நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒவ்வொரு நாளும் பல நிலைகளிலுள்ள மக்களைச் சந்தித்து வருகிறார். 78 வயது நிரம்பிய திருத்தந்தை சற்று களைப்பாகத் தோன்றினாலும், அவரின் உரைகள் அழுத்தம் திருத்தமாய், கருத்துச் செறிவு கொண்டதாய், உலகத் தலைவர்கள் உடனடியாகச் செயலில் இறங்கத் தூண்டுவதாக அமைந்துள்ளன. இத்திருத்தூதுப் பயணத்தின் நான்காவது நாளான இவ்வெள்ளியன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் மிகப்பெரிய நகரமான நியுயார்க்கில் தனது பயணத் திட்டங்களை நிறைவேற்றினார். இவ்வெள்ளி உள்ளூர் நேரம் காலை 8.30 மணிக்கு, இந்திய இலங்கை நேரம் இவ்வெள்ளி மாலை 6 மணிக்கு நியுயார்க் மாநகரிலுள்ள ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமையகத்திற்குச் சென்றார் திருத்தந்தை. ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் மற்றும் அவரின் துணைவியார் திருத்தந்தையை வரவேற்றனர். ஐ.நா. பணிகளின்போது உயிரிழந்த பணியாளர்களின் இரு குழந்தைகள் திருத்தந்தைக்கு மலர்க்கொத்து கொடுத்தனர். பின்னர் ஐ.நா. நிறுவனத்தின் 38வது மாடிக்கு ஐ.நா. பொதுச் செயலருடன் சென்று தனியே சிறிது நேரம் பேசினார் திருத்தந்தை. மொசைக் வண்ண வேலைப்பாடுகள் நிறைந்த திருக்குடும்ப படத்தை ஐ.நா. பொதுச் செயலருக்குப் பரிசாக அளித்தார், ஐ.நா.வின் தங்கப் புத்தகத்திலும் கையெழுத்திட்டார் திருத்தந்தை. முக்கிய பிரதிநிதிகள் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். பின்னர் திருத்தந்தையை ஐ.நா. தலைமையகப் பணியாளர்கள் சந்திப்பிற்கு அழைத்துச் சென்றார் பான் கி மூன். திருத்தந்தை அங்கு நுழைந்ததுமே வாழ்க திருத்தந்தை என்ற முழக்கங்கள். ஐ.நா. நிறுவனப் பணியாளர்களுக்கு உரையாற்றிய பின்னர், கோல்ப் காரில் அந்நிறுவன வராந்தாவில் வந்து GA 200 என்ற அறையில், ஐ.நா.பொது அவையின் 70வது அமர்வின் தலைவரான டென்மார்க் நாட்டின் Mogens Lykketoft, ஐ.நா.பொது அவையின் 69வது அமர்வின் தலைவரான உகாண்டா நாட்டின் Sam Kahamba Kutesa மற்றும் இவர்களின் துணைவியரையும், ஐ.நா. பாதுகாப்பு அவையின் இந்த செப்டம்பர் மாதத் தலைவரான இரஷ்ய நாட்டு Vitaly Churkin ஐயும் சந்தித்தார். பின்னர் அந்நிறுவனத்தின் 2வது தளத்திற்கு வந்து  ஐ.நா.பொது அவையின் 70வது அமர்வின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டார். அந்த அவையின் தலைவர் திருத்தந்தையை வரவேற்று அந்த அவையை ஆரம்பித்து வைத்தார். ஐ.நா.பொது அவையில் தொடக்கவுரையாற்றி அதை ஆரம்பித்து வைத்த முதல் திருத்தந்தை என, சில முதல்களைச் சொல்லி திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார் பான் கி மூன். பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், 193 உறுப்பு நாடுகள் அமர்ந்திருந்த அந்தப் பொது அவையில் இஸ்பானிய மொழியில் உரையாற்றினார். இடையிடையே பலத்த கைதட்டல்கள். திருத்தந்தை உரையாற்றி முடித்ததும் அனைவரும் எழுந்து நின்று நீண்ட நேரம் கைகளைத் தட்டிக் கொண்டே இருந்தனர். ஐ.நா. பணிகளின்போது உயிரிழந்த பணியாளர்களின் நினைவாக அங்கு வைக்கப்பட்டிருந்த மலர்வளையத்தில் கைவைத்து செபித்தார் திருத்தந்தை. பின்னர் இச்சந்திப்பை முடித்து திருத்தந்தை வராந்தாவில் வந்து கொண்டிருந்தபோது சிறார் குழு ஒன்று அருமையான ஒரு பாடலைப் பாடியது. இரண்டரை மணி நேரத்திற்கு மேல் இடம்பெற்ற இச்சந்திப்பை நிறைவு செய்து, அங்கிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற Ground Zero நினைவிடத்திற்குக் காரில் சென்றார் திருத்தந்தை. ஐ.நா. பொது அவையில் திருத்தந்தையர் 6ம் பவுல், 2ம் யோவான் பால், 16ம் பெனடிக்ட் ஆகிய மூவரும் ஏற்கனவே உரையாற்றியுள்ளனர். ஆனால் ஐ.நா. பொது அவையின் தொடக்க அமர்வில் உரையாற்றியிருப்பவர் திருத்தந்தை பிரான்சிஸ். ஐ.நா. நிறுவனத்தில் 1964ம் ஆண்டு முதல் திருப்பீடமும், 2012ம் ஆண்டு முதல் பாலஸ்தீனாவும் பார்வையாளராக உள்ளன.    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.