2015-09-26 14:18:00

இறைவன் நம் நகரங்களில் வாழ்கிறார், திருஅவையும் வாழ்கின்றது


செப்.26,2015. 'காரிருளில் நடந்துவந்த மக்கள், பேரொளியைக் கண்டார்கள்' என்று இறைவாக்கினர் எசயா கூறும் வார்த்தைகளை இன்று சிந்திப்போம். இந்தப் பேரொளியைக் குறித்து தியானிக்கும்படி, எல்லாக் காலத்திலும் இறைமக்கள் அழைப்புப் பெற்றுள்ளனர். இதைத்தான் முதியவர் சிமியோனும் 'பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி' எனக் கூறினார். நம் வாழ்விலும், நம்முடன் வாழும் அனைத்து குடிமக்கள் வாழ்விலும், இந்நகரின் ஒவ்வொரு மூலையிலும் இந்த ஒளி வீசவேண்டும்.

பெரிய நகரங்களில் வாழும் மக்கள், பல்வேறு கலாச்சாரங்களிடையே வாழ்வதால், பல்வேறு சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். இருப்பினும் பன்முக கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், வரலாற்று அனுபவங்கள், மொழிகள், பல்வேறுபட்ட உடைகள், உணவுகள் என பல வளங்களும் இங்கு உண்டு. வாழ்வதற்கென மனிதன் கண்டுபிடித்துள்ள அனைத்து வழிகளும் நகரங்களில்தான் ஒன்றிணைந்து வருகின்றன. அதே நகரங்களில்தான், தங்களை இரண்டாந்தர குடிமக்களாக உணர்பவர்களும், நகரின் ஒரு பகுதியாக எண்ணுவதற்கு தங்களுக்கு உரிமையில்லை என எண்ணுபவர்களும், பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளும், கவனிக்கப்படாத முதியோர்களும், வீடற்றோரும், மருத்துவக் காப்பீடு அற்றவர்களும் வாழ்கின்றனர்.

இந்த நகரங்களில், இயேசு தன் மக்களோடு இணைந்து நடைபோடுகிறார் என்ற எண்ணமே நம்பிக்கைத் தருகிறது. அந்த நம்பிக்கை, நம் சுயநல எண்ணங்களிலிருந்து நம்மை விடுவிக்கிறது. நம்மிடையே வாழும் இறைவனைக் கண்டுகொள்வது எவ்வாறு? இதற்கும் இறைவாக்கினர் எசாயா நமக்கு வழிகாட்டுகிறார்.

இயேசுவை, பேரொளியாகக் காட்டும் எசாயா, அவரை, 'வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்' எனவும் அழைக்கிறார். இதன் வழியாக, இயேசுவின் வாழ்வை நமக்கு அறிமுகப்படுத்தி, அவர் வாழ்வை நம் வாழ்வாக மாற்ற இயலும் என்கிறார். அவர் ஒரு 'வியத்தகு ஆலோசகர்'. ஆம். இயேசு, தன் சீடர்களை வெளியே அனுப்பி, மற்றவர்களை சந்திக்க கட்டாயப்படுத்துகிறார். 'வலிமை மிகு இறைவன்' என்ற வார்த்தைகளைப் பார்த்தோமானால், இயேசுவில், இறைவனே மனுமகனாக உருவெடுத்து, எம்மானுவேலாக நம்மோடு குடிகொள்ள வந்தார். 'என்று முள தந்தை' என்ற பதம், அவரின் அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்கமுடியாது என்பதைக் குறிக்கிறது. காணாமல்போன தன் மகனுக்காக தினம் தினம் காத்திருக்கும் ஒரு தந்தையாக அவர் இருக்கிறார். 'அமைதியின் அரசராம்' நம் இறைவன், நமது குறைகளை அகற்றி, நம்மை அமைதியின் பாதையில் வழி நடத்துகிறார். மற்றவர்களை நாம் ஏற்கும்போது, உதவி தேவைப்படுவோரை நம் சகோதர சகோதரிகளாக நாம் நோக்கும்போது, இறைவன் கொணர்ந்த அமைதி நம் உள்ளத்தை நிறைக்கிறது. இறைவன் நம் நகரங்களில் வாழ்கிறார். திருஅவையும் இந்நகரங்களில் வாழ்கின்றது. நம் அனைவரோடும் கலந்து, நமக்குத் துணையாக நின்று, நம்மிடையே புளிக்காரமாகச் செயல்பட இறைவன் ஆவல் கொள்கிறார், திருஅவையும் ஆவல் கொள்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.