2015-09-26 15:55:00

இரட்டைக் கோபுர நினைவிடத்தில் திருத்தந்தை உரை


செப்.26,2015. இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட இந்த இடத்தில் நாம் கண்ணீர் சிந்துகிறோம், இதில் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் முகங்களில் வேதனையைப் பார்க்கிறோம். அழிவுச் செயல்கள், மனித உணர்வுகள் அற்ற பொருள் சேதம் மட்டுமல்ல, அவற்றுக்கு குறிப்பிட்ட மனிதரின் முகம், பெயர் மற்றும் கதை உண்டு. இவ்வளவு துன்பங்களின் மத்தியிலும், அந்தக் குடும்ப உறுப்பினர்கள் அன்பு மற்றும் நினைவின் சக்தியைக் காட்டுகின்றனர். இக்கோபுரத்தின் தடங்களைச் சுற்றிப் பல அன்புள்ளங்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. நாம் அவர்களை ஒருபோதும் மறக்க இயலாது. அதேநேரம், இந்த இடத்தில் வீரத்துவமான நன்மைத்தனமும் தெளிவாகத் தெரிகிறது. இனம், மதம், தேசியம், அரசியல் என்ற பாகுபாடின்றி அச்சமயத்தில் உதவும் கரங்கள் நீட்டப்பட்டுள்ளன. இவ்வாறு மரணத்தின் இந்த இடம், மீட்கப்பட்ட வாழ்வின் இடமாகவும் மாறியுள்ளது. பல மதங்கள், பல கலாச்சாரங்கள் மற்றும் பல மொழிகளின் பன்மைத்தன்மையின் அடிப்படையில், ஒன்றிப்பை நம்மால் கட்டியெழுப்ப முடியும், அதைக் கட்டியெழுப்ப வேண்டும். நம் அனைத்து வேறுபாடுகள் மற்றும் மாறுபட்ட கருத்துக்களுக்கு மத்தியில் அமைதியான உலகில் நம்மால் வாழ முடியும். இந்த அமைதி, பன்மைத்தன்மையைத் தழுவிக் கொள்வதிலே கிடைக்கும் என்று உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.