2015-09-25 17:18:00

புனித பேட்ரிக் பங்குத்தளத்தில் வீடற்ற மக்கள் சந்திப்பு


செப்.25,2015. இவ்வியாழன் முற்பகல் 11 மணியளவில் வாஷிங்டன் உயர் மறைமாவட்டத்திலுள்ள முக்கியமான மற்றும் மிகப் பழமையான புனித பேட்ரிக் பங்குத்தளத்தில் ஏறக்குறைய 300 வீடற்ற மக்களைச் சந்திக்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். வாஷிங்டன் மாநகரின் கத்தோலிக்க பிறரன்புப் பணிகளின் மையம் உள்ள இப்பங்கு வளாகத்தில் வீடற்ற மக்களுக்குத் தங்கும் வசதிகள் அமைத்துக் கொடுக்கப்ப்ட்டுள்ளன, இன்னும், இங்கு பல்வேறு உணவுத் திட்டங்களும் இடம்பெற்று வருகின்றன. இவ்விடத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், முதலில் உரையாற்றிய வாஷிங்டன் பேராயர் கர்தினால் Donald Wuerl அவர்கள், ஒருவர் ஒருவர்மீது அக்கறை காட்ட வேண்டுமென்று திருத்தந்தை இடைவிடாமல் வழங்கிவரும் செய்தி, தங்களின் பிறரன்புப் பணிகளுக்கும், இந்த உயர் மறைமாவட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு இலட்சத்து இருபதாயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும் உந்துதலாக உள்ளது என்று கூறி திருத்தந்தையின் அப்போஸ்தலிக்க ஆசிரை இறைஞ்சினார். பின்னர் திருத்தந்தை ஆற்றிய உரையில் வீடு இல்லாமல் இருப்பதை எந்த சமூக அல்லது அறநெறிக் கூற்றால் நியாயப்படுத்த முடியாது. இதற்கு நியாயப்படுத்துதலே கிடையாது என்று கூறினார். புனித பேட்ரிக் பங்கில் பிறரன்பு மையத்தில் தங்கியிருந்த வீடற்ற மக்களைக் குளிக்க வைத்து தலைவீசி நல்ல உடை உடுத்துவதற்கு அங்குப் பணிபுரிவோர் அதிகாலை 3 மணிக்கே எழும்பி பணியைத் தொடங்கினர். இந்த வீடற்ற மக்களில் சிலர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், சிலர் வீட்டு வன்முறைக்கு உள்ளானவர்கள், சிலர் தவறாகப் பயன்படுத்தப்பட்டவர்கள். இந்த மக்களின் மதிய உணவை ஆசிர்வதித்து, வாஷிங்டன் திருப்பீட தூதரகம் சென்று மதிய உணவருந்தினார் திருத்தந்தை. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.