2015-09-25 17:04:00

நியுயார்க் மாநகரத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்


செப்.25,2015. அன்பர்களே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்டுவரும் 10வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தில், அவர் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைநகர் வாஷிங்டன் மாநகரில் அந்நாட்டு காங்கிரஸ் அவையில் உரையாற்றுவது, நியுயார்க் மாநகரிலுள்ள 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் உரையாற்றுவது, ஃபிலடெல்பியாவில் 8வது கத்தோலிக்க உலக குடும்பங்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அதனை நிறைவு செய்வது ஆகிய மூன்றும் முக்கிய நிகழ்வுகளாகும். அமெரிக்க ஐக்கிய நாட்டில் திருத்தந்தை மேற்கொண்டுவரும் ஆறு நாள்கள் கொண்ட திருத்தூதுப் பயணத்தில் நான்காவது நாளான இவ்வெள்ளியன்று, உள்ளூர் நேரம் காலை 8.15 மணிக்குப் பயண நிகழ்வுகளைத் தொடங்கினார். நியுயார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் இல்லத்திலிருந்து 3.6 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்குக் காரில் சென்றார் திருத்தந்தை. அந்நிறுவனத்தின் முகப்பில் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், அவரின் துணைவியார் ஆகிய இருவரும் திருத்தந்தையை வரவேற்றனர். மேலும், ஐ.நா. பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் இரு குழந்தைகள் திருத்தந்தைக்கு மலர்க்கொத்து கொடுத்தனர். ஐ.நா. நிறுவனத்தின் பணியாளர்களுக்கும், ஐ.நா. பொது அவைக்கும் தனித்தனியே உரையாற்றினார் திருத்தந்தை. ஐ.நா. நிறுவனப் பணியாளர்களுக்கு ஆற்றிய உரையில் அவர்களின் பணிகளுக்கு நன்றி தெரிவித்தார். அவர்கள் ஒவ்வொருவரின் திறமைக்கேற்ப ஒருவர் ஒருவருக்கு நெருக்கமாக இருந்து, ஒருவர் ஒருவரை மதித்து, அமைதிக்காவும், அமைதியிலும், நீதிக்காவும், நீதி உணர்விலும் ஐ.நா. ஆற்றும் பணிகளுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குமாறு கேட்டுக்கொண்டார். இதற்குப் பின்னர், நியுயார்க்கில் பயங்கரவாதத்தால் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட இடத்தில் பல்சமயப் பிரதிநிதிகளைச் சந்திப்பது, அம்மாநகரில் குடியேற்றதாரரைச் சந்திப்பது, Madison வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றுவது இவ்வெள்ளி பயணத் திட்டத்தில் இருந்தன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.