2015-09-25 16:49:00

காங்கிரஸ்அவை உறுப்பினர்களுக்கு திருத்தந்தை ஆற்றிய உரை


செப்.25,2015. அரசுத் துணைத் தலைவரே, சபாநாயகரே, மாண்புமிகு காங்கிரஸ் அவை உறுப்பினர்களே, அன்பு நண்பர்களே,

காங்கிரசின் இணைந்த அவையில் உரையாற்ற எனக்கு நீங்கள் வழங்கிய அழைப்புக்கு நன்றி. அமெரிக்கா என்ற பெரும் கண்டத்தின் மகனாக நான் இருப்பதால், இந்த அழைப்பு எனக்குத் தரப்பட்டுள்ளது என்று நான் எண்ண விழைகிறேன். இந்தக் கண்டத்திலிருந்து நாம் எவ்வளவோ பெற்றுள்ளோம்; இதற்கு நாம் செய்யவேண்டியவை என்ற பொதுவான பொறுப்பையும் பெற்றுள்ளோம்.

நீங்களே மக்களின் முகங்கள், அவர்களின் பிரதிநிதிகள். பொதுவான நன்மையையும், உங்கள் உடன் குடிமக்களின் மாண்பையும் காப்பதற்காக நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். சட்டங்களை உருவாக்குவது என்ற பணி, எப்போதும் மக்களைக் காப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும்.

உங்கள் பணி, மோசேயின் உருவத்தை இருவழிகளில் சிந்திப்பதற்கு என்னைத் தூண்டுகிறது. மக்களின் நலனை மனதில் கொண்டு அவர் சட்டங்களை உருவாக்கினார். அதே வேளையில், அவர் இறைவனைச் சந்தித்தார் என்பதால், மனிதர்களின் பண்பு, இவ்வுலகைக் கடந்த நிலை என்பதையும் உணர்த்தினார். நீங்களும், ஒவ்வொரு மனிதரிலும் பதிந்திருக்கும் இறை சாயலை பாதுகாக்கும் வண்ணம், சட்டங்களை இயற்ற அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

இன்று நான் உங்களோடு மட்டுமல்ல, மாறாக, உங்கள் வழியே, அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்கள் அனைவரோடும் உரையாட விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் கடினமாக உழைத்து தன் குடும்பத்தைக் காப்பாற்றிவரும் ஆயிரக்கணக்கான ஆண்களோடும், பெண்களோடும் உரையாட விரும்புகிறேன். தங்கள் நீண்ட கால அனுபவங்கள் வழியே, உயர்ந்த ஞானம் கொண்டுள்ள வயது முதிர்ந்தோருடன் உரையாட விரும்புகிறேன். உன்னத இலக்குகளை உண்மையாக்க உழைத்துவரும் இளையோருடன் உரையாட விரும்புகிறேன். வயதில் முதிர்ந்தாலும், அறிவில் முதிர்ச்சியடையாத பலரால், கடினமான சூழல்களைச் சந்திக்கவேண்டி இருந்தாலும், அவற்றால் வழி தவறாமல் இவ்விளையோர் வாழ்கின்றனர்.

நாம் வாழும் சூழலைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு எத்தனையோ அமெரிக்க மக்கள் உதவியுள்ளனர். அவர்களில் நால்வரை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்: ஆப்ரகாம் லிங்கன், மார்ட்டின் லூத்தர் கிங், டோரத்தி டே, மற்றும் தாமஸ் மெர்ட்டன்.

அரசுத் தலைவர், ஆப்ரகாம் லிங்கன் கொலையுண்டதன் 150வது ஆண்டு இது. பொதுவான நன்மையையும், கூட்டுறவையும் உறுதி செய்யும் விடுதலையின் காவலராக, லிங்கன் அவர்கள் விளங்கினார்.

உலகில் இன்று நிலவும் சமுதாய, அரசியல் நிலை நம்மைக் கலக்கமடையச் செய்கிறது. வன்முறை நிறைந்த மோதல்களும், வெறுப்பும் வளர்ந்து வருகின்றன. தவறான, அடிப்படைவாதக் கொள்கைகளால் பாதிக்கப்படாத எந்த மதமும் இல்லை என்பதை நாம் அறிவோம். எனவே, மதம் சார்ந்த அல்லது வேறு வகையான அடிப்படைவாதம் குறித்து நாம் மிக கவனமாக இருக்கவேண்டும்.

அதேவேளையில், இவ்வுலகை நன்மை, தீமை என்ற இரு முகாம்களில் எளிதாகப் பிரித்துப் பார்க்கும் சோதனை குறித்தும் நாம் கவனமாக இருக்கவேண்டும். கொடுங்கோலர்களும், கொலைக்காரர்களும்பயன்படுத்தும்  வன்முறையைப் போலவே நாமும் வன்முறையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

நாம் தரும் பதில், நம்பிக்கையை, அமைதியை, நீதியை உருவாக்குவதாக இருக்கவேண்டும். நமக்குள் கூட்டுறவு முயற்சிகளை வளர்க்க முயலவேண்டும்.

பல மதங்களைச் சார்ந்தவர்கள் வாழும் இந்நாட்டில், ஒவ்வொரு மனிதரின் மிகச் சிறந்த பண்புகளை வெளிக்கொணரும் மத நம்பிக்கையின் குரலுக்குச் செவி சாய்க்கவேண்டும்.

"அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டவர்கள், அவர்கள் அனைவருக்கும், படைத்தவர், அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளார் என்பதும், அவற்றில்,  வாழ்வு, விடுதலை மற்றும் தன் மகிழ்வைத் தேடுவது என்ற உரிமைகள் அடங்கும் என்ற உண்மைகள் தன்னிலேயே வெளிப்படையானவை என்பதை நாங்கள் உண்மையென கருதுகிறோம்" (விடுதலை அறிக்கை, 4 ஜூலை, 1776)

மனிதர்களுக்குப் பணியாற்றுவதே அரசியல் என்றால், அது, பொருளாதாரத்திற்கும், பணத்திற்கும் அடிமையாக இருக்க முடியாது. நீதியையும், அமைதியையும் அனைவருக்கும் உறுதி செய்வது எளிதானப் பணியல்ல. இருப்பினும், இதற்காக நீங்கள் முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று உங்களை ஊக்கப்படுத்துகிறேன்.

50 ஆண்டுகளுக்கு முன், குடியுரிமை என்ற கனவுக்காக பேரணியை நடத்திய மார்ட்டின் லூத்தர் கிங் அவர்களை,  இவ்வேளையில், நினைத்துப் பார்க்கிறேன். அந்தக் கனவு, அமெரிக்காவை கனவுகளின் நாடாக மாற்றியுள்ளது. இலட்சக்கணக்கான மக்கள், தங்கள் கனவுகளை கட்டியெழுப்ப இந்நாட்டைத் தேடி வந்துள்ளனர்.

அந்நிய நாட்டவரைக் கண்டு அஞ்சுபவர்கள் நாம் அல்ல. நாமே ஒரு காலத்தில் அந்நிய நாட்டவராக இருந்தவர்கள்தானே. குடிபெயர்ந்தவர்களின் மகனாக நான் இருப்பதால் இதைச் சொல்கிறேன். அதேவேளையில், இங்கு குடியேறிய மக்கள், மண்ணின் மைந்தர்களாக, இந்நாட்டில் வாழ்ந்தோருடன் மேற்கொண்ட வன்முறையான மோதல்களும் உண்டு. மண்ணின் மைந்தர்களைப் பற்றி, நான் உயர்ந்த மதிப்பு கொண்டுள்ளேன். குடியேறிய மக்கள் இவர்களுடன் நடந்துகொண்ட முறையை, இன்றைய அளவுகோல் கொண்டு தீர்ப்பிடுவது கடினம். இருப்பினும், இந்தத் தவறு மீண்டும் நடவாமல் காப்பது நம் கடமை. இதை நாம் செய்யமுடியும் என்று நான் நம்புகிறேன்.

இரண்டாம் உலகப் போரின் வேளையில், நடைபெற்ற புலம்பெயர்ந்தோர் பிரச்சனைக்குப் பின், இன்று இவ்வுலகம் இப்பிரச்சனையை மீண்டும் சந்திக்கிறது. இச்சூழல், பல கடினமான முடிவுகளை எடுக்க நம்மை அழைக்கிறது. மேம்பட்ட ஒரு வாழ்வைத் தேடி, இந்நாட்டிற்குள் நுழையும் அனைவரையும், எண்ணிக்கையாகப் பார்க்காமல், தனி மனிதர்களாகப் பார்ப்பது நல்லது.

கடினமாக இருக்கும் எதையும் விட்டு விலகிச் செல்வதும், அதை தூக்கி எறிந்துவிடுவதும் இன்று நமக்குள்ள ஒரு பொதுவான சோதனை. இவ்வேளையில், பொன்னான ஒரு விதியை நாம் நினைவில் கொள்வோம்: “பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” (மத்தேயு 7:12)

நாம் வாழ்வை விரும்பினால், அடுத்தவருக்கு வாழ்வளிப்போம். நாம் வாய்ப்புக்களை விரும்பினால், அடுத்தவருக்கும் வாய்ப்புக்கள் அளிப்போம். நாம் மற்றவர்க்குப் பயன்படுத்தும் அளவுகோலே, காலம் நம்மீது பயன்படுத்தும் அளவு கோலாக மாறும்.

என் பணிக்காலத்தின் துவக்கத்திலிருந்து, உலகமெங்கும், தூக்குத் தண்டனையை ஒழிப்பதற்கு, இந்த உண்மை, என்னைத் தூண்டிவந்துள்ளது. அண்மையில் அமெரிக்க ஆயர்கள் தூக்குதண்டனை ஒழிப்பதற்கு அறிக்கை விடுத்துள்ளனர். அவர்களுக்கு என் முழு ஆதரவு உண்டு.

சமுதாயக் கவலைகள் குறித்து பேசும்போது, இறையடியார், டோரத்தி டே அவர்களை குறிப்பிடாமல் இருக்கமுடியாது. ஒடுக்கப்பட்டோர் சார்பில் அவர் எழுப்பிய குரல் இன்று உலகின் பல நாடுகளில் எதிரொலித்து வருகிறது. இத்துறையில் இன்னும் நாம் எவ்வளவோ செய்ய வேண்டியுள்ளது. வறுமைப் பிடியிலும், பசியிலும் சிக்கியுள்ள மக்களுக்கு இன்னும் அதிகம் செய்யவேண்டும். இந்தப் பிரச்சனைகளைக் களைய அமெரிக்கர்கள் பலர் முயற்சிகள் செய்து வருகின்றனர் என்பதை அறிவேன்.

செல்வங்களைப் பகிர்ந்தளிப்பது என்பது, இம்முயற்சிகளின் முக்கிய அங்கம்.

செல்வங்கள், பொது நலன் என்று சொல்லும்போது, இவ்வுலகம் என்ற செல்வத்தைப் பற்றி நாம் பேசவேண்டும். நம் பொதுவான இல்லத்தைப் பற்றி, நாம் அனைவரும் கலந்துரையாடவேண்டும், அனைவருமே இவ்விடயத்தில் மனமாற்றம் பெறவேண்டும் என்பதை, 'இறைவா உமக்கே புகழ்' என்ற மடலில் கூறியுள்ளேன்.

மனிதர்களின் செயல்பாடுகளால் சுற்றுச்சூழல் சீரழிவதை தடுத்து நிறுத்த தீவிரமான முயற்சிகளை நாம் மேற்கொள்ளவேண்டும். இந்த முயற்சிகளை, அமெரிக்க ஐக்கிய நாட்டு காங்கிரஸ் அவை ஆற்றவேண்டும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. அமெரிக்காவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களும், ஆய்வு மையங்களும் இவ்விடயத்தில் மிக முக்கியமான பங்களிப்பைத் தருவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

ஒரு நூற்றாண்டுக்கு முன், உலகப் போர் ஆரம்பமானபோது, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், அதனை, "அர்த்தமற்ற படுகொலை" என்று கூறினார். அதே காலக்கட்டத்தில் பிறந்தவர், தாமஸ் மெர்ட்டன் என்ற சிஸ்டெர்ஸியன் துறவி.

அவர் இன்றும் நம் அனைவருக்கும் பெரும் ஆன்மீகச் சக்தியாக இருக்கிறார். அவர் தன் சுய சரிதையில்: "கடவுளின் சாயலாக இவ்வுலகிற்கு வந்த நான், சுயநலம், வன்முறை ஆகியவற்றால் சிறைப்பட்டு, உலகின் சாயலைத் தாங்கி நிற்கிறேன். கடவுளை அன்புசெய்வதிலும், அவரை வெறுப்பதிலும் ஈடுபட்டுள்ள மனிதர்கள் நிறைந்துள்ளதால், இவ்வுலகம் ஒரு நரகமாகத் தெரிகிறது. கடவுளை அன்புசெய்ய படைக்கப்பட்ட மனிதர்கள், அவரை வெறுத்து, நம்பிக்கையில்லாத அச்சத்தில் சிக்கியுள்ளனர்" என்று எழுதியுள்ளார். மெர்ட்டன் அவர்கள், மக்களிடையிலும், மதங்கள் இடையிலும், உரையாடல் மற்றும் அமைதியை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

உரையாடல் என்று சொல்லும்போது, பல ஆண்டுகளாய் நிலவிவந்த வேறுபாடுகளைக் களைய, அண்மைய மாதங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளை நான் எண்ணிப் பார்க்கிறேன். உரையாடல் என்று சொல்லும்போது, உலகெங்கும் நடைபெறும் ஆயுதம் தாங்கிய மோதல்களையும் எண்ணிப் பார்க்கிறோம். அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் ஆயதங்கள் ஏன் இவ்வுலகில் இன்னும் விற்பனை செய்யப்படுகின்றன? ஒரே ஒரு பதில் மட்டுமே உள்ளது. பணம். அப்பாவி மக்களின் இரத்தத்தில் தோய்ந்த பணம். இச்சூழலில் அமைதி காப்பது, நம்மையும் இக்குற்றத்தில் ஈடுபடுத்திவிடும்.

இந்நாட்டின் நான்கு தனிப்பட்ட மனிதர்கள், நான்கு கனவுகள்: லிங்கன், சுதந்திரம்; மார்ட்டின் லூத்தர் கிங், யாரையும் ஒதுக்காமல் உள்ளடக்கிய சுதந்திரம்; டோரத்தி டே, சமுதாய நீதியும், மனித உரிமைகளும்; தாமஸ் மெர்ட்டன், உரையாடல் செய்யும் திறனும், கடவுள் நோக்கி திறந்த மனம் கொண்டிருப்பதும்.

நான் இந்நாட்டின் பயணத்தை, பிலடெல்பியாவில் நிறைவு செய்வேன். அங்கு, குடும்பங்களின் உலகச் சந்திப்புக் கூட்டத்தில் பங்குபெறுவேன். இந்த நாட்டைக் கட்டியெழுப்ப குடும்பங்கள் எவ்வளவு முக்கியமாக இருந்தது! இன்று, குடும்பங்கள் உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் சவால்களைச் சந்திக்கின்றன.

இவ்வேளையில், குடும்பப் பிரச்சனைகளால் அதிகம் பாதிக்கப்படுவது, இளையோரே என்பதை கவனத்தில் கொணர விழைகிறேன். வாய்ப்புக்கள் நிறைந்த ஒரு எதிர்காலம் அவர்களை அழைத்தாலும், இன்றைய வன்முறைகள், நம்பிக்கையற்ற நிலை இவற்றால் அவர்கள் கட்டுண்டு கிடக்கின்றனர். இன்றைய இளையோர் குடும்பங்களைத் துவக்க வேண்டாம் என்று சொல்வதுபோல் இன்றைய நிலை உள்ளது.

லிங்கனைப் போல், சுதந்திரத்தைக் காப்பாற்றும் எந்த ஒரு நாடும் மேலான நாடு என்று கருதப்படலாம். அனைவருக்கும், அனைத்து உரிமைகளும் கிடைக்கவேண்டும் என்று மார்ட்டின் லூத்தர் கிங் போல கனவு காண்பவர்கள் உள்ள நாடு, மேலான நாடு; சமுதாய நீதியை நிலைநாட்ட, டோரத்தி டே போல உழைப்பவர்களும், உரையாடலை வளர்க்கவும், இறைவனை ஆழ்நிலையில் உணரவும் தாமஸ் மெர்ட்டன் போல முயல்பவர்களும் உள்ள நாடு, மேலான நாடு.

இந்தப் பண்புகளை தன் கலாச்சாரப்  பாரம்பரியத்தில் அமேரிக்கா கொண்டுள்ளது என்பதை என் பகிர்வில் கூற விழைந்தேன்.   இந்தப் பண்புகளில் வளர்ந்து, இளையோர் சிறந்ததொரு நாட்டை தங்கள் உரிமையாகக் கொள்ளவேண்டும் என்பதே என் ஆவல்.

அமெரிக்காவை இறைவன் ஆசீர்வதிப்பாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.