2015-09-25 17:12:00

அமெரிக்க ஐக்கிய நாட்டு காங்கிரஸ் அவையில் திருத்தந்தை


செப்.25,2015. செப்டம்பர் 24, இவ்வியாழனன்று திருத்தந்தையர் வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திராத நிகழ்வு ஒன்று இடம் பெற்றது. அதுதான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் காங்கிரஸ் அவையில் உரையாற்றியது. புனித திருத்தந்தை 2ம் யோவான் பால் அவர்கள், 1999ல் போலந்து பாராளுமன்றத்திலும், 2002ல் இத்தாலிய பாராளுமன்றத்திலும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2011ல் ஜெர்மன் பாராளுமன்றத்திலும் உரையாற்றியுள்ளனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் உள்ளூர் நேரம் காலை 9.20 மணிக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டுக் காங்கிரஸ் அவையில் உரையாற்றச் சென்றார். அந்தப் பிரதிநிதிகள் அவையின் ஆன்மீக அருள்பணியாளர் Patrick Conroy அவர்கள், திருத்தந்தையை முதலில் சந்திப்பதற்கு விருப்பம் தெரிவித்ததால், திருத்தந்தையும் அந்த அருள்பணியாளரைச் சந்தித்தார். அதோடு அந்த அருள்பணியாளர் தன்னை ஆசிர்வதிக்க வேண்டுமென்று அவர்முன் சிரம் தாழ்த்தினார். அருள்பணி Conroy அவர்களும், திருத்தந்தையின் தலைமீது கைவைத்து செபித்தார். இந்த எதிர்பாராத நிகழ்வு தன்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியதாக அவர் கூறினார். இதன் பின்னர் திருத்தந்தை, கத்தோலிக்கரான சபாநாயகர் Joe Boehner அவர்களைத் தனியே சந்தித்து உரையாடினார். பின்னர் அந்நாட்டுக் காங்கிரஸ் அவை உறுப்பினர்களுக்கு, மரண தண்டனை ஒழிப்பு, ஆயுதக் களைவு, சுற்றுச்சூழல், குடியேற்றதாரர் என, பல்வேறு தலைப்புகளில் ஆங்கிலத்தில் நீண்ட உரை ஒன்றும் ஆற்றினார். திருத்தந்தை உரையாற்றும்போது, திருத்தந்தையின் கருத்துக்களை வரவேற்பதற்கு அடையாளமாக, இடையிடையே அனைவரும் எழுந்து நின்று உரக்க கைகளைத் தட்டினர். இவ்வாறு முப்பது தடவைகள் கைகளைத் தட்டினர். உரையின் இறுதியிலும் எல்லாரும் எழுந்து நின்று அதிக நேரம் கைகளைத் தட்டிக் கொண்டே இருந்தனர். இந்த உரையை நிறைவு செய்த பின்னர் சபாநாயகர் Joe Boehner அவர்கள் திருத்தந்தைக்கு நன்றி சொல்லி, அங்கு உருவங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு திருத்தந்தையை அழைத்துச் சென்றார். அந்த அறையில் புனிதர் ஹூனிப்பெரோ செர்ரா அவர்களின் திருவுருவமும் இருந்தது. பின்னர் அங்கிருந்த நூலகத்தில் பரிசுகள் பரிமாறப்பட்டன. அதன் பின்னர் பால்கனிக்குச் சென்று அங்கே வளாகத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமான மக்களிடம் இஸ்பானியத்தில் பேசினார் திருத்தந்தை. இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இங்கிருக்கும் மிக முக்கியமானவர்களாகிய சிறாருக்கும் நன்றி. உங்களனைவரையும் இறைவன் ஆசிர்வதிப்பாராக. எனக்காகச் செபியுங்கள். உங்கள் மத்தியில் செபிக்க இயலாதவர்கள், நம்பிக்கை இல்லாதவர்கள் இருந்தால், அவர்கள் எனக்கு நல்வாழ்த்துச் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை. அமெரிக்காவை இறைவன் ஆசிர்வதிப்பாராக என்று சொல்லி அமெரிக்க காங்கிரஸ் அவை சந்திப்பை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.