2015-09-24 16:42:00

ஹூனிப்பெரோ செர்ரா அவர்களின் புனிதர் பட்டமளிப்பு திருப்பலி


செப்.24,2015. வாஷிங்டன் திருப்பீட தூதரகத்திலிருந்து 7.2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அமல அன்னை தேசிய திருத்தலத்திற்கு இப்புதன் பிற்பகல் 3.30 மணிக்கு காரில் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்திருத்தல வளாகத்தில் அமர்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான விசுவாசிகள் மத்தியில் திறந்த காரில் வலம் வந்தார். அச்சமயத்தில் குழந்தைகளை முத்தமிட்டார். வயதானவர்களை ஆசிர்வதித்தார். பின்னர் அருளாளர் ஹூனிப்பெரோ செர்ரா அவர்களைப் புனிதராக உயர்த்தும் திருப்பலியைத் தொடங்கினார். 18ம் நூற்றாண்டு இஸ்பானிய பிரான்சிஸ்கன் அருள்பணியாளராகிய  ஹூனிப்பெரோ செர்ரா அவர்கள், நவீன கலிஃபோர்னியா மாநிலத்தில் 21 மறைப்பணித்தளங்களை நிறுவியவர். கத்தோலிக்கரான அமெரிக்க ஐக்கிய நாட்டு உதவி அரசுத்தலைவர் Joe Biden, பல இலத்தீன் அமெரிக்க குடியேற்றதாரர் உட்பட நூற்றுக்கணக்கான ஆயர்கள், குருக்கள், விசுவாசிகள் கலந்துகொண்ட இத்திருப்பலியில்  ஹூனிப்பெரோ சேரா அவர்களை, புனிதர் என அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அனைவரும் கரவொலி எழுப்பி கைகளைத் தட்டி தங்களின் நன்றியைத் தெரிவித்தனர். இத்திருப்பலியில் பல்வேறு கலாச்சாரங்களின் சந்திப்பை உணர முடிந்தது. கொரியா, இந்தியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும், பூர்வீக இனத்தவரும் விசுவாசிகள் மன்றாட்டு செபங்களைச் சொன்னார்கள்.

1713ம் ஆண்டில் இஸ்பெயினில் பிறந்த புனித ஹூனிப்பெரோ செர்ரா அவர்கள், 1730ம் ஆண்டில் பால்மா, தெ ஹேசுஸ் பிரான்சிஸ்கன் சபை இல்லத்தில் புகுமுகுத் துறவியாகச் சேர்ந்து அவ்வாண்டு செப்டம்பர் 15ம் தேதி தனது முதல் வார்த்தைப்பாடுகளைக் கொடுத்தார். 1749ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பிரான்சிஸ்கோ பவுலோ என்பவருடன் அமெரிக்காவுக்குக் கடல் பயணம் மேற்கொண்டார். மெக்சிகோவின் வெரா குரூஸ் எனுமிடத்தில் இறங்கினார். இவர் பயணம் செய்வதற்கு குதிரைகள் வழங்கப்பட்டாலும், 250 மைல்கள் நடந்தே மெக்சிகோ நகரை அடைந்தார். ஒட்டோமி பூர்வீக மொழியைக் கற்று மறைக்கல்வி போதித்தார். 1768ம் ஆண்டில் கலிஃபோர்னியாவில் மறைப்பணியாற்ற முன்வந்தார். இப்பகுதியில் 21 மறைப்பணித்தளங்களை உருவாக்கினார். புனித யுனிப்பெரோ செர்ரா அவர்கள் கலிஃபோர்னியாவின் திருத்தூதர் என போற்றப்படுகிறார். இவர் பழங்குடி மக்களின் மாண்பு காக்கப்படவும், அவர்களின் உரிமைகளுக்காகவும், திருஅவையின் உரிமைகளுக்காகவும் போராடினார். செப மனிதராக வாழ்ந்தார். உடலை கடுமையாக ஒறுத்து தபம் செய்தார். சான் கார்லோ மறைப்பணித்தளத்தில் தனது 70வது வயதில் 1784ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி இறைவனடி சேர்ந்தார் புனித ஹூனிப்பெரோ செர்ரா.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.