2015-09-24 16:22:00

வாஷிங்டன் மாநகரில் திருத்தந்தையின் வியாழன்தின நிகழ்வுகள்


செப்.24,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஆறு நாள்கள் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் இப்பயண நிகழ்வை முதலில் தொடங்கிய தலைநகர் வாஷிங்டனில், அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் கூட்டத்தின் ஆரவார வரவேற்பு. மக்களின் திருத்தந்தை என அந்நாட்டவரால் போற்றப்படுகின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பயணம் செய்யும் சாலைகளின் இரு பக்கங்களிலும் திருத்தந்தையைப் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் நின்று கொண்டு கைகளை அசைத்து, தங்களின் ஆவலை நிறைவேற்றுவதைக் காண முடிகின்றது. செப்டம்பர் 24, இவ்வியாழனன்று அமெரிக்க ஐக்கிய நாட்டு வரலாற்றில் தடம் பதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் உரையாற்றும் முதல் திருத்தந்தை என்ற பெயரையும் பெறுகிறார். 435 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்கப் பாராளுமன்றத்திற்கு இவ்வியாழன் உள்ளூர் நேரம் காலை 9.20 மணிக்குச் சென்று சபாநாயகர் Joe Boehner அவர்களைத் தனியே சந்தித்து உரையாடினார். பின்னர் பத்து மணிக்கு பாராளுமன்றத்தில் உரையாற்றச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.  அப்போது இந்திய இலங்கை நேரம் இவ்வியாழன் இரவு 7 மணி 30 நிமிடமாகும். இச்சந்திப்பை முடித்து வாஷிங்டன் மாநகரின் புனித பேட்ரிக் பங்கில் காரித்தாஸ் மையத்தில் வீடற்றவர்களைச் சந்திப்பது, நியுயார்க் நகர் சென்று அருள்பணியாளர் மற்றும் துறவியருடன் மாலை வழிபாட்டில் கலந்துகொள்வது இவ்வியாழன் பயணத் திட்டத்தில் இருந்தன. செப்டம்பர் 25, இவ்வெள்ளியன்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் உரையாற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.