2015-09-24 15:57:00

கடுகு சிறுத்தாலும் : ஆரம்பமாகின்றது ஓர் ஆன்மீகப் பயணம்


அந்த ஆசிரமத்தில் இருந்த ஓர் அன்னையின் முன்பாக ஓர் இளம் துறவி நின்று, அன்னையே, நான் ஓர் ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன், என்னை ஆசிர்வதியுங்கள் என்று பணிவோடு வேண்டினார். அந்த அன்னை இதைக் காதில் வாங்கியதாகவேத் தெரியவில்லை. ஆனால் அந்த இளம் துறவியிடம், மகனே, எனக்கு நீ ஓர் உதவி செய்ய வேண்டும். பக்கத்தில் இருக்கின்ற அந்த அறைக்குச் செல். அங்கே அந்தக் கதவுக்குப் பின்னால் ஒரு கத்தி இருக்கிறது. அதை எடுத்து வந்து என்னிடம் கொடு என்றார். அந்தத் துறவியும் அக்கத்தியை எடுத்துவந்து கொடுத்தார். அதை வாங்கிய அந்த அன்னை, மகனே, உனது பயணம் நல்லபடியாக அமையும், போய் வா என்று துறவியின் தலையில் தனது கையை வைத்து ஆசிர் வழங்கினார். அப்போது அந்த இளம் துறவி, அம்மா, இந்தக் கத்திக்கும், உங்கள் ஆசிருக்கும் என்ன தொடர்பு, எனக்கு ஒன்றும் விளங்கவில்லை என்று கேட்டார். அதற்கு அன்னை, மகனே, நீ இந்தக் கத்தியை என்னிடம் கொடுத்தபோது கூரான பகுதியை உன் பக்கம் இருக்கிற மாதிரி பிடித்துக் கொண்டு, கைப்பிடி இருக்கிற ஆபத்தில்லாத பகுதியை என் பக்கம் நீட்டிக் கொடுத்தாய். அதனால் எந்தவொரு செயலைச் செய்யும்போதும் அதனால் ஏற்படும் தீமைகளை நீ ஏற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு நன்மையே செய்வாய் எனப் புரிந்து கொண்டேன் என்றார். அதற்கு அந்த இளம் துறவி, அம்மா, இதையெல்லாம் நான் சிந்தித்துச் செய்யவில்லையே என்றார். ஆமாம். உன்னை அறியாமலே பிறருக்கு நன்மை செய்கிற இயல்பான குணம் உன்னிடம் உள்ளது. உனக்கு எல்லாம் நல்லபடியாகவே நடக்கும், சென்று வா மகனே என வழியனுப்பி வைத்தார் அன்னை. ஆன்மீகப் பயணமும் அங்கே ஆரம்பமானது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.