2015-09-23 16:58:00

கியூபாவிலிருந்து அமெரிக்கா சென்ற விமானப் பயணத்தில்


செப்.23,2015. கியூபா நாட்டின் சந்தியாகோ நகரிலிருந்து வாஷிங்டன் நகருக்குச் சென்ற விமானப் பயணத்தில், தன்னோடு விமானப் பயணம் செய்த பத்திரிகையாளர்களின் பல கேள்விகளுக்குப் பதில் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். கியூபா நாட்டுக்கான அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பொருளாதாரத் தடை முதல் அமெரிக்க ஐக்கிய நாட்டு காங்கிரஸ் அவையில் திருத்தந்தை உரையாற்ற இருப்பது வரை பல தலைப்புகளில் பல கேள்விகள் திருத்தந்தையிடம் கேட்கப்பட்டன. கியூபா மீது நீண்டகாலமாக விதித்திருந்த பொருளாதாரத் தடையை, பேச்சுவார்த்தையின் பலனாக அமெரிக்க ஐக்கிய நாடு நீக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் இவ்விவகாரம் பற்றி வருகின்ற வெள்ளியன்று அமெரிக்க காங்கிரஸ் அவையில் ஆற்றும் உரையில் நான் குறிப்பிடப் போவதில்லை. இது ஒரு பொது விவகாரம். இருதரப்பையும் திருப்திபடுத்தும் நல்லதொரு ஒப்பந்தம் ஏற்பட வேண்டும். நல்ல உறவுகளையே எல்லாரும் எதிர்பார்க்கின்றனர். காங்கிரஸ் அவை உரையில் முன்னேற்றம் மற்றும் ஒன்றித்த வாழ்வின் அடையாளமாக பல நாடுகளின் உறவுகள் அமைய வேண்டும் என்பது பற்றித் தான் பேசவிருப்பதாகத் தெரிவித்தார் திருத்தந்தை. திருத்தந்தையின் எழுத்துகளில் அதிகமாக இடதுசாரி போக்குத் தெரிவதாகக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, கத்தோலிக்கத் திருஅவையின் சமூகக் கோட்பாடுகளையே தான் கூறுவதாகத் தெரிவித்தார். திருத்தந்தை பிரான்சிஸ் ஒரு கம்யூனிஸவாதியா அல்லது கத்தோலிக்கரா என்று சில அமெரிக்க ஐக்கிய நாட்டு விமர்சகர்கள் கேட்கின்றனரே என்ற கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, திருஅவையின் சமூகக் கோட்பாடுகளில் சொல்லப்பட்டவற்றைத் தாண்டி, வேறு எதுவும் நான் ஒருபோதும் எதையும் கூறியதில்லை என்பதில் உறுதியாய் உள்ளேன், நான் உண்மையான கத்தோலிக்கரா என்று நீங்கள் அறிய விரும்பினால் விசுவாச அறிக்கையை நான் சொல்லத் தயார் என்று சொன்னார். உடனே பத்திரிகையாளர் அனைவரும் சப்தமாகச் சிரித்தனர். இவ்வாறு மேலும் பல கேள்விகளுக்குப் பதில் சொல்லி பத்திரிகையாளர்களை விமானப் பயணத்தில் மகிழ்வித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.