2015-09-22 16:14:00

வோலேகின் நகரில் திருத்தந்தை பிரான்சிஸ்


செப்.22,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கியூபா நாட்டில், தலைநகர் ஹவானா, வோல்கின், சந்தியாகோ ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் திருத்தூதுப் பயணத் திட்டங்களை நிறைவேற்றினார். செப்டம்பர் 21, இத்திங்கள் காலை ஹவானா திருப்பீட தூதரகத்திலிருந்து வோல்கின் நகருக்குப் புறப்பட்டார். ஹவானாவிலிருந்து 700 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற வோலேகின் நகருக்கு ஆலித்தாலியா விமானத்தில் ஒரு மணி இருபது நிமிடங்கள் பயணம் செய்து, அந்நகரின் Frank Pais பன்னாட்டு விமான நிலையம் சென்றடைந்தார் திருத்தந்தை. கியூபாவுக்கு ஏற்கனவே இரு திருத்தந்தையர் திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டிருந்தாலும், வோல்கின் நகரைப் பார்வையிடும் முதல் திருத்தந்தையாவார்  திருத்தந்தை பிரான்சிஸ். கியூபாவின் மூன்றாவது பெரிய நகரமாகிய வோல்கின், San Isidoro de Holguín என்பவரால் 1545ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்நகரின் Calixto Garcia Iniguez புரட்சி வளாகத்தில் திருத்தந்தை நிறைவேற்றும் திருப்பலியில் கலந்து கொள்வதற்கு இலட்சக்கணக்கான விசுவாசிகள் கூடியிருந்தனர். கியூபாவின் தந்தை என போற்றப்படும் Calixto Garcia Iniguez அவர்கள், இஸ்பானிய ஆதிக்கத்திலிருந்து கியூபாவை மீட்பதற்காக, போரில்லாதப் போராட்டத்தை முன்னின்று வழிநடத்தியவர். எனவே அவர் பெயரால் இந்த புரட்சி வளாகம் அழைக்கப்படுகிறது. இவ்வளாகத்தில் திறந்த காரில் வந்து விசுவாசிகளின் ஆரவாரத்தில் மகிழ்ந்து திருப்பலி மேடை சென்று திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை. அப்போது இத்திங்கள் உள்ளூர் நேரம் காலை 10.30 மணியாகும். இந்திய இலங்கை நேரம் இத்திங்கள் இரவு 8 மணியாகும். திருத்தூதர் புனித மத்தேயு விழாவான இந்நாளில் திருத்தந்தை ஆற்றிய மறையுரையில், ஆண்டவர், மத்தேயுவை, கருணையுடன் பார்த்தபின், 'என்னைப் பின்பற்றி வா' என்று அழைத்தார். மத்தேயு எழுந்து அவரைத் தொடர்ந்தார். ஒரு பார்வைக்குப்பின் ஒரு வார்த்தை. அன்புக்குப் பின், பணிசெய்ய அழைப்பு. மத்தேயு முற்றிலும் மாற்றம் பெற்றார். தன் பணியிடம், தான் சேர்த்துவைத்த பணம், தன்னை மக்கள் ஒதுக்கியது என்ற அனைத்தையும் விட்டுவிட்டார். இயேசுவின் பார்வை பட்ட அனைவரும், அடுத்தவரை, தன் சுயநலனுக்காகப் பயன்படுத்துவதை விட்டு வெளியேற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

செப்டம்பர் 21 இத்திங்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாழ்வில் ஒரு முக்கியமான நாள். 17 வயது நிரம்பியிருந்த ஹோர்கே மாரியோ பெர்கோலியோ என்ற நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 1953ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி, ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற்றபோது இறைவன் தன்னை குருத்துவப் பணிக்கு அழைப்பதை உணர்ந்தார். இயேசு கிறிஸ்துவால் உங்களை மாற்ற முடியும் என்று நம்புகின்றீர்களா? இக்கேள்வியைக் கேட்டு இத்திருத்தூதுப் பயணத்தில் இரண்டாவதாக பொதுவில் நிறைவேற்றிய இத்திருப்பலியை முடித்து வோல்கின் ஆயர் இல்லத்திற்குத் திறந்த காரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு மதிய உணவை உண்டு சிறிது நேரம் ஓய்வும் எடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.