2015-09-22 16:04:00

சந்தியாகோ தெ கியூபா நகரில் திருத்தந்தை பிரான்சிஸ்


செப்.22,2015. கியூபா என்ற முக்கிய தீவையும், பல தீவுகளையும் உள்ளடக்கிய கரீபியன் பகுதி நாடு கியூபா. 1492ம் ஆண்டில் நாடுகாண் பயணி கிறிஸ்டோபர் கொலம்பஸ் கியூபாவில் காலடி பதிப்பதற்கு முன்னர் இந்நாட்டில் அமெரிக்க பூர்வீக மக்கள் வாழ்ந்தனர். 1898ம் ஆண்டில் இடம்பெற்ற இஸ்பானிய-அமெரிக்கப் போர் வரை கியூபா, இஸ்பானிய காலனியாக இருந்தது. தற்போதைய கியூப கம்யூனிச நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் சந்தியாகோ தெ கியூபா. இலக்கியத்திற்கும், இசைக்கும், அரசியலுக்கும் புகழ்பெற்ற இந்நகரம், 1514ம் ஆண்டில் தியேகோ வெலாஸ்கெஸ் என்ற இஸ்பானியரால் உருவாக்கப்பட்டது. ஒரு காலத்தில் கியூபாவின் தலைநகராக விளங்கிய இந்நகரம், இயற்கையான துறைமுகம், எல் மோரோ அரண்மனை, விண்ணேற்பு அன்னை பேராலயம் என, அழகு பொங்கும் கலாச்சார வரலாற்று நினைவிடங்களையும் கொண்டு, யுனெஸ்கோ நிறுவனத்தின் பாரமரிப்பிலும் உள்ளது. இந்தப் புகழ்பெற்ற சந்தியாகோ நகரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கியூபா நாட்டுக்கான தனது திருத்தூதுப் பயணத்தின் நான்காவது நாள் நிகழ்வுகளை இச்செவ்வாய் உள்ளூர் நேரம் காலை 7.30 மணிக்குத் தொடங்கினார். அப்போது இந்திய இலங்கை நேரம் இச்செவ்வாய் மாலை 4 மணி. சந்தியாகோ நகரிலுள்ள புனித பெரிய பேசில் குருத்துவக் கல்லூரியிலிருந்து கோப்ரே பிறரன்பு அன்னை மரியா தேசிய திருத்தலத்திற்குச் சென்ற திருத்தந்தை, அத்திருத்தலத்தில் காலை 8 மணிக்கு இஸ்பானிய மொழியில் திருப்பலியைத் தொடங்கினார். இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இத்திருப்பலியில் மறையுரையும் ஆற்றினார். அன்னைமரியாவைப்போல், நம் திருஅவை,  பாலங்களைக் கட்டியெழுப்பும், பிரிவினைச் சுவர்களை இடித்தெறியும், ஒப்புரவின் விதைகளை விதைக்கும் இடமாக மாறட்டும். மக்களின் துன்ப வேளைகளில் நம் கைகளைக் கழுவி வெளியேறாமல், அவர்களோடு ஒன்றிணைந்து நடக்கும் ஓர் அமைப்பாக, வாழ்வுக்கும் கலாச்சாரத்திற்கும், சமூகத்திற்கும், அர்ப்பணிக்கப்பட்டவர்களாக நடைபோடுவோம். நம் கூடுகளை விட்டு வெளியேறி மற்றவரைச் சந்திக்கச் செல்லும் பண்பே நாம் கொள்ளக்கூடிய மிக உன்னத பாரம்பரிய சொத்து. அன்னைமரியாவோடு இணைந்து செபிப்போம் என்று கூறினார் திருத்தந்தை. இத்திருப்பலியின் இறுதியில், சந்தியாகோ பேராயர் Garcia Ibanez அவர்கள் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் அனைவரையும் ஆசிர்வதித்து அங்கிருந்து திறந்த காரில் சந்தியாகோ நகர் விண்ணேற்பு அன்னை பேராலயத்திற்குக் குடும்பங்களைச் சந்திப்பதற்காகச் சென்றார். இரண்டு பெரிய கோபுரங்களைக் கொண்டு, காண்பவரைக் கவர்ந்திழுக்கும் இப்பேராலயம், சந்தியாகோ நகரம் உருவாக்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்பட்ட ஆண்டில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இப்பேராலயத்தில் திருத்தந்தையின் இச்சந்திப்பே கியூபத் திருத்தூதுப் பயணத்தின் இறுதி நிகழ்வாகும். பின்னர் கியூபாவிலிருந்து விடைபெற்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் செல்வது இச்செவ்வாய்ப் பயணத் திட்டத்தில் உள்ளது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.