2015-09-22 15:20:00

எல் கோப்ரே மரியன்னைத் திருத்தலத்தில் திருத்தந்தையின் மறையுரை


செப்.22,2015. அன்பு சகோதர, சகோதரிகளே, இறைவன் நம் ஒவ்வொருவரையும் சந்திக்கும்போதெல்லாம், 'உங்கள் வீட்டிற்குள்ளேயே, உங்கள் சுயநலன்களிலேயே முடங்கி விடாதீர்கள்' என்ற அழைப்பை விடுக்கிறார். இதைத்தான் நாம் இன்றைய நற்செய்தியில் கண்டோம்.  இறைவன் நம்மை சந்திக்கிறார், நாம் பிறரைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக, நம்மோடு உரையாடுகிறார், நாம் பிறரோடு உரையாடவேண்டும் என்பதற்காக, நமக்கு அன்பை வழங்குகிறார், நாம் அன்பை பிறருக்கு வழங்க வேண்டும் என்பதற்காக.

இயேசுவின் முதல் சீடராகிய அன்னைமரியாவை, பாலஸ்தீனா கிராமத்தில் இறைவன் வந்து சந்திக்கிறார். மங்கள வார்த்தை அறிவிக்கப்பட்ட அந்த 15 முதல் 17 வயதுக்குட்பட்ட இளம்பெண், பிறர் தனக்கு வந்து பணிபுரிய வேண்டும் என்று எண்ணாமல், வீட்டிலிருந்து வெளியேறி, தன் உறவினரான எலிசபெத்தின் வீடு நோக்கி, சேவை புரிய விரைகிறார். ஆம், கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற எண்ணம், அன்னைமரியாவைப்போல், நம்மையும் வீட்டை விட்டு வெளியே வரவைத்து, பிறருக்கு சேவை புரியத் தூண்டுவதாக இருக்க வேண்டும்.    நாம் பெற்ற மகிழ்வு, பிறருடன் பகிரப்பட வேண்டும் என்பதை உணர்த்துவதாக இது இருக்கிறது. முதிர் வயதில் தாய்மைப் பேற்றை அடைந்த எலிசபெத்தை சந்திக்க சென்ற அன்னை மரியா அவர்கள், மனித குல வரலாற்றிலும் தொடர்ந்து நம்மை கண்காணித்துவருவதுபோல், இப்போதும் இறைவார்த்தையை நமக்கு கொணர்ந்து கொண்டிருக்கிறார்.  கியூபா மண்ணும், அன்னையின் பிரசன்னத்தால் சந்திக்கப்பட்டுள்ளது. பிறரன்பு அன்னைமீது கொண்ட பக்தியால் இந்நாடு வளர்ந்துள்ளது. இதைத்தான் உங்கள் முன்னோர்கள் நூறாண்டுகளுக்கு முன்னால், திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்களிடம், பிறரன்பின் அன்னை மரியாவை, கியூபாவின் பாதுகாவிலியாக அறிவிக்குமாறு விண்ணப்பித்தபோது, தெரிவித்தனர். 'அவமானமோ, ஏழ்மையோ, எதுவும் கியூபா மக்களை, அன்னைமரியா மீதான பக்தியிலிருந்து அகற்ற முடியவில்லை. ஏனெனில், எல்லா துன்ப நேரங்களிலும், அன்னை மரியா, அவர்களின் வாசலில், அவர்களுக்கு துணையாக நின்றார்'  என எழுதியிருந்தனர், உங்கள் முன்னோர். பிறரன்பின் அன்னையாக போற்றப்படும் அன்னையின் இந்த திருத்தலத்திலிருந்து அன்னைமரியா, நம் பாரம்பரிய வேர்களையும், சுய அடையாளங்களையும் பாதுகாக்கிறார். இங்கு விசுவாசம் அழிந்துபோக விடப்படவில்லை. இதற்காக நாம் நம் பாட்டிகளுக்கும், தாய்மார்களுக்கும், ஏனையோருக்கும் நன்றிகூற வேண்டும். அவர்கள்தான் கடுகு விதையையொத்த ஓர் இடத்தை விசுவாசத்திற்கென ஒதுக்கி வந்ததால், தூய ஆவியாரும் அதன் வழியாக தொடர்ந்து செயலாற்றி வந்தார்..

தலைமுறை தலைமுறையாக ஒவ்வொரு நாளும் நாம், நம் விசுவாசத்தை புதுப்பிக்கும்படி அழைப்புப் பெறுகிறோம். பிறரன்பின் அன்னை மரியாவைப்போல், நாம் அன்புடன்கூடிய கரிசனை உடையவர்களாக மாற அழைப்புப் பெறுகிறோம். அவரைப்போல் நாமும் நம் கூட்டை விட்டு வெளியே வந்து, பிறருக்கு சேவையாற்ற, பிறரை நோக்கி நம் கண்களையும் இதயத்தையும் திறக்க  முன்வர வேண்டும்.   மற்றவர்களோடு உரையாடவும், அவர்களின் மகிழ்வு, நம்பிக்கை மற்றும் ஏமாற்றங்களில் அவர்களோடு பங்கு கொள்ளவும், நம்  விசுவாசம் நமக்கு உதவுகிறது.  நம் வீடுகளை விட்டு வெளியே வந்து நோயுற்றோரையும் சிறைக் கைதிகளையும் சந்திக்க, நம் விசுவாசம் நம்மை அழைக்கிறது. சிரிப்பாரோடு சிரிக்கவும், மகிழ்வாரோடு மகிழவும் இந்த விசுவாசம் நமக்கு உதவுகிறது. அன்னை மரியாவைப்போல் நாமும் திருஅவையாக பணிபுரிவோம். வீட்டைவிட்டு வெளியே வந்து முன்னோக்கிச் செல்பவர்களாகவும், வாழ்வோடு இணைந்து நடைபோடுபவர்களாகவும், நம்பிக்கையை உறுதிப்படுத்துபவர்களாகவும், ஒன்றிப்பின் சின்னமாக விளங்குபவர்களாகவும்,நாம் ஒரு திருஅவையாக செயல்படுவோம். அன்னைமரியாவைப்போல், நம் திருஅவை,  பாலங்களைக் கட்டியெழுப்பும், பிரிவினைச் சுவர்களை இடித்தெறியும், ஒப்புரவின் விதைகளை விதைக்கும், இடமாக மாறட்டும். மக்களின் துன்ப வேளைகளில் நம் கைகளை கழுவி வெளியேறாமல், அவர்களோடு ஒன்றிணைந்து நடக்கும் ஓர் அமைப்பாக, வாழ்வுக்கும் கலாச்சாரத்திற்கும், சமூகத்திற்கும், அர்ப்பணிக்கப்பட்டவர்களாக நடைபோடுவோம். நம் கூடுகளை விட்டு வெளியேறி மற்றவரைச் சந்திக்கச் செல்லும் பண்பே நாம் கொள்ளக்கூடிய மிக உன்னத பாரம்பரிய சொத்து. அன்னைமரியாவோடு இணைந்து செபிப்போம். ஏனெனில் அன்னைமரியாவின் செபம், கடந்த கால நினைவுகளையும், நன்றியுணர்வையும் உள்ளடக்கியது. இறைவன் நம்மிடையே கடந்து செல்கிறார், நம் முன்னோர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார் என்பதற்கு அன்னை மரியாவின் பாடல், செபம் நமக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.