2015-09-21 15:29:00

திருத்தந்தை, கியூப அரசுத்தலைவர் சந்திப்பு


செப்.21,2015. செப்டம்பர் 19, இச்சனிக்கிழமையன்று, கியூபா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்கான தனது திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில் கியூபத் தலைநகர் ஹவானாவில் தனது பயண நிகழ்வுகளை ஆரம்பித்தார். விமான நிலையத்தில் அரச வரவேற்பைப் பெற்று அந்நாட்டிற்கான முதல் உரையாற்றி முதல் நாளை நிறைவு செய்தார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த பத்தாவது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் இரண்டாம் நாளாகிய இஞ்ஞாயிறன்று ஹவானா புரட்சி வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றி, ஒரு நாட்டின் பெருமையும், முக்கியத்துவமும் அந்நாட்டில் உள்ள வலுவற்றோருக்கு பணியாற்றுவதில் அடங்கியுள்ளது. இந்தப் பணியில் நாம் உண்மையான மனிதத்தின் பலன்களைக் காணமுடியும் என்று தனது மறையுரையில் கூறினார். ஞாயிறு திருப்பலிக்குப் பின்னர் ஹவானா திருப்பீட தூதரகம் சென்று மதிய உணவருந்தி ஓய்வெடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உள்ளூர் நேரம் மாலை 5.45 மணிக்கு மீண்டும் தனது பயண நிகழ்வுகளைத் தொடங்கினார். அப்போது இந்திய இலங்கை நேரம் இத்திங்கள் காலை 1.15 மணியாகும். ஹவானா திருப்பீட தூதரகத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அரசுத்தலைவர் மாளிகைக்கு காரில் சென்றார் திருத்தந்தை. அந்நாட்டின் அரசுத்தலைவர் மற்றும் அரசு அலுவலகங்கள், இன்னும் கியூப கம்யூனிச கட்சியின் தலைமையகம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் புரட்சி மாளிகையில் முதலில் கியூப அரசுத்தலைவர் ராவுல் காஸ்ட்ரோ அவர்களைத் தனியே ஏறக்குறைய ஒரு மணிநேரம் சந்தித்துப் பேசினார். 84 84 வயது நிரம்பிய ராவுல் காஸ்ட்ரோ அவர்கள், படகைச் செலுத்தும் மரத் துடுப்பால் செய்யப்பட்ட நீளமான சிலுவையை திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார். திருத்தந்தையும், வண்ண மொசைக் வேலைப்பாடுகள் நிறைந்த எல் கோப்ரே பிறரன்பு அன்னைமரியா படத்தை அரசுத்தலைவருக்குப் பரிசாக அளித்தார். மேலும், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், கியூப உதவி அரசுத் தலைவர் Miguel Diaz-Canel Bermudez அவர்களை இஞ்ஞாயிறன்று சந்தித்து, கியூபாவுக்கும் திருப்பீடத்துக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் குறித்து கலந்துரையாடினார். கியூப சமுதாயத்திற்குள் ஒப்புரவு அவசியம் என்பது இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாக, திருப்பீடச் செய்தி தொடர்பாளர் அருள்பணி லொம்பார்தி அவர்கள் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.