2015-09-21 15:37:00

ஃபிடெல் காஸ்ட்ரோ அவர்களுக்கு திருத்தந்தையின் பரிசு


செப்.21,2015. இஞ்ஞாயிறன்று ஹவானா புரட்சி வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றிய பின்னர், நோயுற்று இருக்கும் 89 வயது நிரம்பிய கியூப முன்னாள் அரசுத்தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோ அவர்களையும் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். மதம் மற்றும் உலக விவகாரங்கள் குறித்து இவ்விருவரும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். கியூபப் புரட்சித் தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோ அவர்களுக்குப் பொருள் பொதிந்த ஒரு சிறப்புப் பரிசையும் அளித்தார் திருத்தந்தை. இயேசு சபை அருள்பணியாளர் அர்மாந்தோ லொரென்தே அவர்கள் இயற்றிய பாடல்களும் மறையுரைகளும் அடங்கிய இரு குறுந்தகடுகளும், இறையியலாளர் அலெக்சாண்டர் புரோன்சாத்தோ எழுதிய சில  புத்தகங்களுமே அப்பரிசு. ஃபிடெல் காஸ்ட்ரோ அவர்கள், தனது 16ம் வயதுவரை படித்த பெல்லென் இயேசு சபை பள்ளியில் அவருக்கு ஆசிரியராகவும், ஆன்மீக வழிகாட்டியாகவும் இருந்தவர் அருள்பணி லொரென்தே. கியூபாவிலிருந்து கட்டாயமாக நாடு கடத்தப்பட்டு தனது கடைசிக் காலங்களில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் மியாமில் வாழ்ந்த இந்த அருள்பணியாளர், 2010ம் ஆண்டில் தனது 91வது வயதில் இறப்பதற்கு முன்னர், ஃபிடெல் காஸ்ட்ரோ அவர்கள், மனம் மாற வேண்டும், பிராயச்சித்தம் தேட வேண்டும் என்று, பொதுப்படையாகக் கேட்டுக்கொண்டவர். தான் கியூபா சென்று ஃபிடெல் காஸ்ட்ரோ அவர்களுக்கு ஒப்புரவு அருள் அடையாளத்தை நிறைவேற்ற விருப்பம் தெரிவித்தவர். ஃபிடெல் காஸ்ட்ரோ அவர்கள் பள்ளியில் படித்தபோது சிறந்த மாணவராகவும், பல நல்ல நண்பர்களைக் கொண்டிருந்தவர் எனவும் அருள்பணியாளர் லொரென்தே அவர்கள் தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஃபிடெல் காஸ்ட்ரோ அவர்களும், ஃபிடெலும் மதமும் என்ற தலைப்பில் தான் எழுதிய நூலை திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார் காஸ்ட்ரோ.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.