2015-09-20 16:16:00

ஹோசே மார்த்தி வளாகத்தில் திருத்தந்தை ஆற்றிய ஞாயிறு திருப்பலி


செப்.,20,2015. ஞாயிறு காலை உள்ளூர் நேரம் காலை 8 மணிக்கு அதாவது, இந்திய நேரம் ஞாயிறு மாலை 5.30 மணிக்கு ஹவானாவின் திருப்பீடத் தூதரகத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஹோசே மார்த்தி வளாகம் நோக்கி பயணமானார் திருத்தந்தை. இங்குதான் ஞாயிறு திருப்பலியை பொதுமக்களுக்கு நிறைவேற்றுவதற்கு ஏற்பாடாகியிருந்தது. கியூபாவில் இஸ்பானிய ஆட்சிக்கு எதிராக போராடி, போரில் கொல்லப்பட்ட,  பிரபல பத்திரிகையாளரும் கவிஞருமான ஹோசே மார்த்தியின் பெயரால் அழைக்கப்படும் இந்த வளாகம், கியூபா மக்களுக்கு விடுதலையின் மிகப்பெரும் அடையாளமாக விளங்குகிறது. 6 இலட்சம் பேர் இருக்கக் கூடிய கொள்ளளவைக் கொண்ட, இந்த வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளிடையே ஒரு வலம்வந்த திருத்தந்தை, அங்கிருந்த சிறு அறைக்குள் திருப்பலிக்கு தயாரிப்பதற்கு சென்றபோது, அவ்விடத்தில் குழுமியிருந்த பிற கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் சிலரையும் சந்தித்து, தன் வாழ்த்துக்களை பரிமாறினார். பின்னர் உள்ளூர் நேரம் 9 மணிக்கு திருப்பலியைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பலியின் துவக்கத்தில் ஹவானா பேராயர் ஹைமே ஒர்த்தெகா அலமினொ திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.