2015-09-20 16:40:00

விமான நிலையத்தில் திருத்தந்தை வழங்கிய உரை


செப்.20,2015. அரசுத்தலைவரே, கியூபா மக்களின் சார்பாக நீங்கள் வழங்கிய வரவேற்பிற்கு நன்றி. அதேவண்ணம், எனக்கு வரவேற்பளித்த கர்தினால் Jaime Ortega y Alamino அவர்களுக்கும், கியூபா ஆயர் பேரவையின் அனைத்து சகோதர ஆயர்களுக்கும் என் நன்றி.

அரசுத் தலைவரே, உங்கள் சகோதரர் ஃபிடேல் அவர்களுக்கு என் தனிப்பட்ட வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். கியூபா நாட்டின் மக்கள் அனைவரையும் என்னால் நேரடியாகச் சந்திக்க முடியாவிடினும், அவர்கள் அனைவரையும் என் அன்பு கலந்த எண்ணங்களால் அரவணைக்கிறேன்.

எனக்கு முன்பு இங்கு வந்திருந்த புனித அருள்தந்தை இரண்டாம் யோவான் பவுல், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆகியோர், இந்நாட்டுடன் நிறுவிய உறவு வழியில் நானும் பயணிக்க வந்திருக்கிறேன்.

திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், எல் கோப்ரே (El Cobre) பிறரன்பு கன்னி மரியாவை இந்நாட்டின் பாதுகாவலராக அறிவித்த முதல் நூற்றாண்டு நிறைவுறும் வேளையில் நான் இங்கு வந்திருக்கிறேன்.

ஒரு மகனாக, திருப்பயணியாக நான் அந்த அன்னையைச் சந்திக்கும்போது, கியூபாவின் அனைத்துக் குழந்தைகளையும் அந்த அன்னைப் பாதுகாக்க வேண்டும் என்று சிறப்பாக வேண்டிக்கொள்வேன்.

"கியூபா நாடு இவ்வுலகிற்கும், இவ்வுலகம் கியூபா நாட்டிற்கும் தங்கள் கதவுகளைத் திறந்துவிடட்டும்" என்று புனிதத் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், 1998ம் ஆண்டு இங்கு வந்திருந்தபோது விடுத்த ஒரு விண்ணப்பம், தற்போது நடைமுறையாக மாறிவருவது, மகிழ்வைத் தருகிறது.

கடந்த சில மாதங்களாக, கியூபாவிற்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே நல்லுறவுகள் வளர்ந்துவருவது நம்மை நம்பிக்கையில் நிறைக்கிறது. இந்த நல்லுறவு முயற்சிகள், உலகின் அனைத்து நாடுகளிலும் ஒப்புரவைக் கொணர்வதற்கு, ஓர் எடுத்துக்காட்டாக அமையும் என்று நம்புகிறேன். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.